Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

தைப்பூசம் திருவிழாவில் சகோதரன் என்ற காவடி

படம்: சுரேஷ் வனாஸ்

பத்துமலை, 11 பிப்ரவரி — சிலருக்கு தைப்பூசம் என்பது பக்தி மற்றும் பலியானத்தின் பரிசோதனை. அலங்கரிக்கப்பட்ட காவடி அதன் அடையாளமாகும்.

ஆனால் சிங்கப்பூரைச் சேர்ந்த 46 வயதான சுரேஷ் வானஸுக்கு, அவரது பக்தியின் அளவுகோல் ஒரு பாரம்பரிய கவடி அல்ல. அவரது காவடி – அவரது சகோதரன்.

ஒவ்வோர் ஆண்டும், தைப்பூசம் நிகழ்வின் ஒரு பகுதியாக, அவர் தனது 41 வயதான சகோதரர் குணசீலனை தனது தோள்களில் தூக்கிக்கொண்டு வழிபாட்டில் ஈடுபடுகிறார். சிறுபிள்ளையாக இருந்ததிலிருந்து செரிப்ரல் பால்ஸி நோயால் பாதிக்கப்பட்டுள்ள குணசீலன், வாழ்நாள் முழுவதும் பல சவால்களை எதிர்கொண்டுள்ளார். ஆனால் அவரது சகோதரனாக, அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது சுரேஷின் நம்பிக்கை.

“இது என்னுடைய கடமை, என்னுடைய பக்தி. அவரை கவனித்துக் கொள்வதும், அவருக்கு மகிழ்ச்சியையும் நலனையும் உறுதிசெய்வதும் – அதுவே என் அர்ப்பணிப்பு,” என்று அவர் செய்தியாளரிடம் கூறினார்.

தன் சகோதரனே தனது வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்தவரெனவும், அவரே தெய்வத்துடன் தன் உறவை ஆழமாகப் புரிந்துகொள்ளச் செய்தவரெனவும், சுரேஷ் கூறுகிறார்.

“நாம் வாழும் காலத்தில் நாம் நேசிப்பவர்களுக்கு அன்பை வெளிப்படுத்த வேண்டும். அது காலம் கடந்த பிறகு வருத்தப்படுவதற்குப் பதிலாக, நான் அவரை இப்போது மகிழ்விக்க விரும்புகிறேன்,” என அவர் உணர்ச்சி மிகுந்து கூறினார்.

இவ்வாண்டு, பத்து மலைக்கு செல்வதற்கான திட்டங்களை சுரேஷ் மாற்றிக் கொள்ள நேர்ந்தது. அதற்குப் பதிலாக, தாய்நாட்டிலேயே தைப்பூசத்தைக் கொண்டாடுகின்றனர்.

தன் சகோதரனின் வாழ்வில் மகிழ்ச்சியையும் அனுபவங்களையும் கொண்டு வருவதே தனது உண்மையான கடமை எனக் கருதும் சுரேஷ், குணசீலனின் கனவுகளை நனவாக்க எப்போதும் முயற்சிக்கிறார்.

“அவருக்கு உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்பது கனவு. புக்கேட், ஐரோப்பா, பல இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே அவரது விருப்பம்,” என அவர் கூறினார்.

இதை அடைய, தனியாக வருமானம் ஈட்டும் ஒரே ஆதரவாளராக இருக்க வேண்டும் என்பதே மிகப்பெரிய சவால். ஆனால் எந்த இன்னலாக இருந்தாலும், சகோதரனின் மகிழ்ச்சிக்காக எல்லாம் தாண்டிப் போகத் தயாராக உள்ளார்.

“சமீபத்தில் அவரை இந்தியா அழைத்துச் சென்றேன். 11 நாட்கள் முழுவதும் அவரை தூக்கிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. முடித்தபோது எனது உடல் முழுவதும் வலி,” என்றாலும், “அவரின் மகிழ்ச்சியைக் காணும்போது அந்த வலிகள் எல்லாம் மறைந்து விடுகின்றன,” என சுரேஷ் தெரிவித்தார்.

குணசீலனின் வாழ்வை சமூகக் கட்டுப்பாடுகளால் அல்ல, சந்தோஷத்தால் நிரப்ப வேண்டும் என்பதே அவரது ஒரே இலக்கு.

“முந்தைய காலங்களில், மாற்றுத் திறனாளிகள் மக்களுக்கு தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டனர். ஆனால் நான் அவரைப் பிறரின் பார்வையில் உயர்வாக நிறுத்த விரும்புகிறேன்,” என்றார் சுரேஷ்.

சுரேஷ் வானஸின் இந்த அளப்பரிய உறுதிப்பாடு – பக்தியும் பலியானமும் ஒன்றாகக் கலந்த தெய்வீக அன்பின் அழகிய வெளிப்பாடாக மாறியுள்ளது.

-வீரா இளங்கோவன்

Scroll to Top