
கோலாலம்பூர், மார்ச் 8 — உலகளவில் மகளிர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, மலேசிய அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் பலரும் சமூக ஊடகங்கள் மற்றும் உரைகளின் மூலம் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தனது முகநூல் பதிவில், மகளிர் தினம் பெண்களின் விடாமுயற்சி, துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பை போற்றும் ஒரு நாள் என்றும், பெண்கள் முழு நம்பிக்கையுடன் முன்னேறி, தங்களின் கனவுகளை எட்ட போராடும் வலிமையை பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட், மகளிர் தினம் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் பெண்களின் முக்கிய பங்களிப்பை கொண்டாடும் ஒரு வாய்ப்பாக இருப்பதாக தெரிவித்தார். அதோடு, சமத்துவம் மற்றும் நீதியான உலகை உருவாக்க, பெண்களின் உரிமைகளை வலுப்படுத்தும் செயல்பாடுகள் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவுபடுத்தினார்.
தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டாகாங், நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அவசியமானது என்றும், பல்வேறு துறைகளில் அவர்கள் நிரூபித்த சாதனைகள் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவை என்றும் கூறினார்.
இதற்கிடையே, தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங், பெண்கள் எந்த தடைகளும் இல்லாமல் வளரும் சூழல் உருவாக வேண்டும் என்றும், நாட்டின் முன்னேற்றத்தில் அவர்கள் பாதுகாப்பாக பங்களிக்கக்கூடிய நியாயமான இடம் வழங்கப்பட வேண்டும் என்றும் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
-யாழினி வீரா