
கோத்தா திங்கி, 28 பிப்ரவரி — 19 வயது மாணவி ஓட்டிச் சென்ற காரின் கட்டுப்பாட்டை இழந்து, 7 மீட்டர் ஆழமான பள்ளத்திற்குள் விழுந்து ஏற்பட்ட விபத்தில் மாணவி உயிரிழந்தார்.
மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பிரடெண்ட் யூசுப் ஒத்மான் கூறுகையில், லொக் ஹெங்-மவாய் சாலை, கிலோமீட்டர் 32 அருகே இந்த விபத்து சம்பவித்ததாக, நேற்று மாலை 6.50 மணிக்கு பொதுமக்கள் தகவல் அளித்ததாக தெரிவித்தார்.
“ப்ரோட்டான் சாகா காரை மாணவி செலுத்தி வந்தபோது, எதிர்ப்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து, அருகிலிருந்த பள்ளத்திற்குள் கவிழ்ந்ததாக நம்பப்படுகிறது.
“விபத்தில், மாணவி தலையில் கடுமையான காயம் அடைந்து, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
“அவரது உடல், கோத்தா திங்கி மருத்துவமனையின் மேல் பரிசோதனைகாக அனுப்பப்பட்டது. இந்த வழக்கு, 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் 41(1) பிரிவின் கீழ் விசாரணையில் உள்ளது,” என அவர் கூறினார்.
-யாழினி வீரா