
சாண்டோஸ் போட்டிகளில் தவிர்க்க முடியாத பெயராக விளங்கிய பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார், பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் கிளப் சாண்டோஸ்-க்கு திரும்புவதாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு சவூதி அரேபியாவின் Al Hilal-க்காக களமிறங்கிய அவர், அடிக்கடி ஏற்பட்ட காயம் காரணமாக வெறும் ஏழு ஆட்டங்களிலேயே பங்கேற்றார்.
நெய்மார் தனது சமூக ஊடகப் பக்கத்தில், “நான் சாண்டோஸ் ஃபுட்போல் கிளப்புடன் ஒப்பந்தம் செய்ய இருக்கிறேன்” என்று அறிவித்துள்ளார். இதற்கு, சாண்டோஸ் அதிகாரப்பூர்வ X பக்கம் “உன்னுடைய வீடு காத்திருக்கிறது. உன்னுடைய மக்கள் காத்திருக்கிறார்கள்” என்று பதிலளித்தது.
காயங்களால் சவூதி அரேபியாவில் தடுமாறிய காலம்
2023 ஆகஸ்ட் மாதம், நெய்மார் Al Hilal-க்கு US$104 மில்லியன் (RM456 மில்லியன்) சம்பளத்தில் இணைந்தார். ஆனால், 2026 உலகக்கோப்பை தகுதி சுற்றில் பிரேசிலுக்காக விளையாடும் போது அவர் வலது முழங்கால் மெனிஸ்கஸ் கிழிந்ததால் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆட்டம் காண முடியவில்லை.
Al Hilal பயிற்சியாளர் ஜோர்ஜ் ஜீசஸ், “பழக்கப்பட்ட நிலைக்கு நெய்மார் திரும்ப முடியவில்லை. அவர் மீண்டும் முழுமையாக ஆடுவது மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கிறது” என்று சமீபத்தில் கூறியிருந்தார்.
சாண்டோசில் கடைசி வாய்ப்பு?
32 வயதான நெய்மார், 2026 உலகக்கோப்பைக்கு பிரேசில் அணியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற இலக்குடன் MLS (அமெரிக்கா) அணிகளின் அழைப்பை நிராகரித்து சாண்டோஸ்-க்கு திரும்பியுள்ளார்.
சாண்டோஸ் அணிக்கு இது பெரிய மாற்றமாக இருக்கும், ஏனெனில் அவர்கள் 2023-இல் இரண்டாம் பிரிவிலிருந்து மீண்டும் முதன்மை பிரிவுக்கு முன்னேறியுள்ளனர். மார்ச் மாத இறுதியில் தொடங்கும் பிரேசிலிய தேசிய லீக், மாநில தொடர்கள், மற்றும் கோப்பை போட்டிகள் என மிகப்பெரிய போட்டித் தொடரில் அவர் பங்கேற்க வேண்டியிருக்கும்.
நெய்மாரின் வருகை சாண்டோஸ் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும், அவரின் சிறந்த காலம் கடந்துவிட்டதாக பலர் கருதுகின்றனர். 136 கோல்கள் 225 ஆட்டங்களில் அடித்த நெய்மார், 2013-ல் பார்சிலோனா அணியில் இணைந்து மெஸ்ஸி, சுவாரெஸ் ஆகியோருடன் 2015 UEFA சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றார்.
பிரேசில் ரசிகர்கள், 2026 உலகக்கோப்பைக்கு முன்னர், நெய்மார் மீண்டும் தனது சிறந்த நிலைக்கு திரும்புவாரா? என்று ஆவலாக காத்திருக்கின்றனர்.
-யாழினி வீரா