Tazhal Media – தழல் மீடியா

/ Jun 07, 2026
Latest News
tms

உலகத் தமிழ் வர்த்தக மாநாடு டிசம்பர் மாதம் – உலகத் தமிழர்களை இணைக்கும் வணிக மேடை!

கோலாலம்பூர், 31 அக். – உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு இணைந்து நடத்தும் 12ஆம் குளோபல் வர்த்தக மாநாடு, வரும் டிசம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், ஏற்றுமதி – இறக்குமதி வியாபாரிகள் மற்றும் புதிய தொழில் கிளைகளை நிறுவ விரும்புவோர் பங்கேற்கின்றனர்.

இந்தியாவின் சிறு மற்றும் குறுந்தொழில் துறைகள் (MSME) இம்மாநாட்டில் முக்கிய பங்காற்ற உள்ளன. தமிழக அரசின் சிறு குறுந்தொழில் அமைச்சகம், வேளாண்மை மற்றும் சிறுதானியங்கள் தொடர்பான ஏற்றுமதி வாய்ப்புகளைப் பற்றி விளக்கவுள்ளது. இதன்மூலம் தமிழக வேளாண்மைத் துறையின் தயாரிப்புகளை உலக சந்தைகளில் கொண்டு செல்லும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

மேலும், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அரசுகள் இடையே கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆஸ்திரேலிய அரசு தொழில்முறை ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு மானியம் வழங்கத் தொடங்கியுள்ளது. இதன் பேரில் பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் தொடங்கவும் ஆராய்ச்சி மேற்கொள்ளவும் பல நிறுவனங்கள் ஆஸ்திரேலியாவை நோக்கி ஆர்வம் காட்டி வருகின்றன.

மாநாட்டின் ஏற்பாட்டாளர் மற்றும் உலகத் தமிழ் வர்த்தக சங்கத் தலைவர் திரு. செல்வகுமார் கூறியதாவது, “இந்த மாநாடு உலகத் தமிழர்களின் வணிக உறவுகளை வலுப்படுத்தும் ஒரு வரலாற்றுச் சந்திப்பாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு: +6016-6167708

-யாழினி வீரா

Scroll to Top