Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

பெரியாரின் சிந்தனைகளை முன்னிறுத்திய இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு 3.0

படம்: ஊடகம்

கோலாலம்பூர், 23 செப்டம்பர் 2025 – கருஞ்சட்டை இளைஞர் படையின் தலைமையில் நடைபெற்ற பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு 3.0 இன்று மலேசியாவின் புகழ்பெற்ற KL-Selangor Chinese Assembly Hall வளாகத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இக்கருத்தரங்கு இளைஞர்களிடையே பகுத்தறிவு சிந்தனையை வளர்க்கவும், பெரியாரின் கோட்பாடுகளை மலேசிய சமூகத்தில் வலுப்படுத்தவும் என்ற உயரிய நோக்கத்துடன் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சி இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது. காலை 10 மணி முதல் 2 மணி வரை மலாய் மொழி அமர்வு நடைபெற்றது. இதில், மலேசிய சமூகத்தில் அதிகரித்து வரும் மத-இன நல்லிணக்க சவால்களை மாற்று சிந்தனையின் வழி எவ்வாறு சமாளிக்கலாம் என்பது குறித்த விவாதம் இடதுசாரி தோழர்களால் முன்வைக்கப்பட்டது. பல்வேறு சிந்தனையாளர்களும் சமூக ஆர்வலர்களும் இதில் கலந்து கொண்டு தங்கள் பார்வைகளை பகிர்ந்தனர்.

மாலை 2 மணி முதல் 4 மணி வரை நடைபெற்ற தமிழ் அமர்வு, இளைஞர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. மலேசிய இந்தியர்களுக்கிடையே நிலவும் சாதிய மனநிலைகள், பாலின பாகுபாடுகள், மேலும் சமீபத்தில் வலுத்து வரும் மத-இன தீவிரவாதத்தின் அபாயங்கள் குறித்து திறந்தவெளி விவாதங்கள் நடந்தன. இளைஞர்கள் ஆவலுடன் கலந்துகொண்டு தங்கள் கேள்விகளையும் கருத்துகளையும் முன்வைத்தனர்.

இந்த கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக டான் ஶ்ரீ குமரன் கலந்துகொண்டார். மேலும், இந்திய அரசியல்வாதி இரா.திருமாவளவன் திறப்புரை ஆற்றியதன் மூலம் நிகழ்ச்சி மிகுந்த உற்சாகத்துடன் துவங்கியது. அவரின் உரை, இளைஞர்களின் சிந்தனையை சவால் செய்யும் விதமாகவும், சமூக மாற்றத்திற்கான உறுதியை ஊட்டும் வகையிலும் இருந்தது.

நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, வளாகத்தில் தமிழிலும், மலாயிலும், ஆங்கிலத்திலும் பல்வேறு தலைப்புகளில் புத்தகக் கூடங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

கருஞ்சட்டை இளைஞர் படை ஏற்பாடு செய்த இந்த பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு 3.0, இளைஞர்களின் சிந்தனையில் ஒரு புதிய அலைபாய்ச்சலை ஏற்படுத்தி முடிவடைந்தது. இளைஞர்கள் சமூக மாற்றத்திற்கான பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்ற வலியுறுத்தலோடு கருத்தரங்கு நிறைவடைந்தது.

-யாழினி வீரா

Scroll to Top