Tazhal Media – தழல் மீடியா

/ Mar 06, 2026
Latest News
tms

இனி BN இல்லை? – மஇகாவின் எதிர்கால திசையில் பேராளர்களின் ஒருமித்த வாக்கு

ஷாஆலம், 17 நவ. – மஇகாவின் 79ஆவது தேசிய பொதுப் பேரவையில் இன்று முக்கியமான அரசியல் தீர்மானம் எடுக்கப்பட்டது. நாடு முழுவதிலிருந்து வந்த 1,808 பேராளர்கள் ஒருமித்தமாக கட்சியை பாரிசான் நேஷனல் (BN) கூட்டணியில் இருந்து விலகத் தயாராக இருக்க வேண்டும் என்ற முடிவை ஆதரித்தனர். எனினும், இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் கட்சி தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் உயர் தலைமைக்கே ஒப்படைக்கப்பட்டது.

இந்த தீர்மானம், அடிப்படை உறுப்பினர்கள் முதல் மாநில மற்றும் தேசிய மட்டத்திலிருந்த தலைவர்களுடன் நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைகளின் முடிவாக முன்வைக்கப்பட்ட மூன்றாவது பிரேரணை மூலம் மேற்கொள்ளப்பட்டது. தனது உரையில், இருந்துவரும் BN கூட்டணியில் மஇகாவுக்கு போதுமான இடமும், இந்தியர்களுக்காக பயனுள்ள பங்கையும் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பதைக் பேராளர்கள் வலியுறுத்தினர்.

“79ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து பேராளர்களும், BN-இல் தொடருவது இனி பயனில்லாதது மற்றும் மஇகாவின் குரல் தேசிய வளர்ச்சியில் பலமாக ஒலிக்க புதிய அரசியல் திசை தேவைப்படுகிறது என்று ஒருமனதாக ஒப்புக்கொள்கிறார்கள்,” என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.

இதன்படி, BN-இல் இருந்து வெளியேறும் நடவடிக்கை கட்சியின் அரசியலமைப்புக்கு இணங்க மேற்கொள்ளப்படும் என்றும், அதே நேரத்தில் பேரிகாட்டான் நேஷனல் (PN) கூட்டணியில் உறுப்பினராக சேர்வதற்கான கோரிக்கை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பேரவையில் BN ஆதரவு கட்சிகளின் சில பிரதிநிதிகள் வந்திருந்தாலும், BN-இன் அதிகாரப்பூர்வ நிர்வாகிகள் யாரும் பங்கேற்காதது கவனிக்கப்பட்டது.

முன்னதாக, மஇகா பி.என். நோக்கி நகர்வதற்கான சாத்தியம் எம்.சி.ஏ-வை விட அதிகமென அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டிருந்தன.

– யாழினி வீரா

Scroll to Top