
கோலாலம்பூர், செப் 19 – இசை உலகில் மறக்க முடியாத தடம் பதித்த இசைமுரசு நாகூர் ஹனீஃபா அவர்களின் பிறப்பின் நூற்றாண்டை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாசா மருத்துப் பல்கலைக்கழக மண்டபத்தில் சிறப்பு விழா நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வை மதிப்பிற்குரிய செனட்டர் தான்ஸ்ரீ ஹனிஃபா அவர்கள் ஏற்பாடு செய்து வருகிறார். விழாவிற்கு முன்னிலை வகிப்பவர் முன்னாள் மத்திய அமைச்சர் மாண்புமிகு டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆவார்.
முழுநாள் நடைபெற உள்ள இந்தக் கொண்டாட்டத்தில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பேச்சாளர்களான கவியருவி அப்துல் காதர், பேராசிரியர் அப்துல் சமது, மற்றும் கம்பம் பீர் முஹம்மது பாகவி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.
விழாவின் சிறப்பம்சமாக நாகூர் ஹனீஃபா பாடிய அற்புத பாடல்கள் மீண்டும் ஒலிக்க இசை நிகழ்ச்சி ஏற்பாடாகியுள்ளது. இதில் நெல்லை அபூபக்கர், சூப்பர் சிங்கர் புகழ் ஃபரீதா, ராஜபாட் ராஜா முஹம்மது, ஹாஜி செய்யது அலி, ஏ.ஆர். ஹாஜா ஆகியோர் குரல் கொடுக்கின்றனர்.
இந்தியாவிலிருந்து சிறப்பு இசைக் கலைஞர்களும் பங்கேற்று, மறைந்த நாகூர் ஹனீஃபா அவர்களின் இசைப் பயணத்தை நினைவுகூரவுள்ளனர். விழாவில் பெருந்திரளான இசை ரசிகர்கள் கலந்து கொள்ளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-ஸ்ரீ



