Tazhal Media – தழல் மீடியா

/ Jun 07, 2026
Latest News
tms

ரோன்95 விலை லிட்டருக்கு RM1.99 ஆக குறைப்பு

படம்: ஊடகம்

புத்ராஜெயா, 22 செப்டம்பர் – வரும் செப்டம்பர் 30ஆம் தேதி முதல், ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள அனைத்து மலேசியர்களும் ஒரு லிட்டர் ரோன்95 பெட்ரோலை வெறும் ரிங்கிட் 99 சென் சலுகை விலையில் பெற தகுதி பெறுவார்கள்.

இத்திட்டம் “BUDI95 – BUDI MADANI RON95” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படுவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார். இதன் மூலம் தற்போதைய விலை லிட்டருக்கு ரிங்கிட் 2.05 என்பதிலிருந்து குறைக்கப்பட்டு, மக்களுக்கான உதவித் திட்டம் நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற பிரதமர் துறை ஊழியர்களுடனான மாதாந்திரச் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அரசாங்கத்தின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மக்கள் செலவினச் சுமையை குறைக்கும் முயற்சியாக இதை பிரதமர் விளக்கினார்.

மேலும், சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) மற்றும் தேசிய பதிவுத் துறை (JPN) தரவுகளின் அடிப்படையில், ஒரு கோடியே 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நன்மைக்குப் பங்கு பெறுவார்கள். வருமான நிலை எதுவாக இருந்தாலும், ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதே முக்கிய தகுதியாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டம், மக்களுக்கான நேரடி உதவித் தொகையாக கருதப்படுவதோடு, நாட்டின் பொருளாதாரத்தில் சமநிலையைக் கொண்டுவரும் முக்கிய முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

-யாழினி வீரா

Scroll to Top