
நெகிரி செம்பிலான், 4 ஏப்ரல்: புக்கித் தங்கா அருகே வியாழக்கிழமை, ஓர் அதிர்ச்சிகரமான சம்பவத்தில், ஓரிடத்தில் நிறுத்தியிருந்த லோரி டிரைவரை கரும் புலி தாக்கியது. இந்த காட்சிகள் ஒரு வாகனத்தின் டாஷ்-கேம் மூலம் பதிவாகி, சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
16 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், கரும் புலி திடீரென லோரி டிரைவரை பாய்ந்து தாக்கும் சம்பவம் தெளிவாக காணப்படுகிறது. ஆனால், அருகே வேறு ஒரு வாகனம் வந்ததை உணர்ந்ததும், அந்த புலி சாலையை கடந்துவிட்டது.
இந்நிலையில், தாக்கப்பட்ட நபர் எந்த நிலைமையில் உள்ளார் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. வீடியோவின் இறுதியில் அவர் எழுந்து நிற்கும் காட்சி மட்டும் பதிவாகியுள்ளது.
இந்த பகுதியில் கரும் புலிகள் இருப்பது புதிதல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதே இடத்தில் ஒரு கரும் புலி வாகனத்தின் அடியில் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த சம்பவத்துக்கான உறுதியான தகவல்கள் இதுவரை இல்லை என நெகிரி செம்பிலான் மாநில உயிரியல் பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்கா துறை இயக்குநர் பைசல் இஸ்ஹாம் பிக்ரி தெரிவித்துள்ளார். மேலும் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
-யாழினி வீரா