
கோலாலம்பூர், அக். 15, 2025 – பிரதமர்துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சரான டத்தோஸ்ரீ டாக்டர் ஸலிஹா முஸ்தபாவின் அரசியல் செயலாளராக திருமதி சிவமலர் கணபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது மலேசிய அரசியலில் பெண் ஒருவர் கூட்டரசு நிலை அமைச்சரின் அரசியல் செயலாளராக பொறுப்பேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நியமனம் ஆகும்.
இன்று காலை கோலாலம்பூர் நாடாளுமன்றக் கட்டிடத்தில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் தலைமைச் செயலாளர் தன்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் முன்னிலையில் சிவமலர்சத்தியப் பிரமாணம் செய்து பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
சட்டத் துறையில் வழக்கறிஞராகப் பணியாற்றிய சிவமலர், அரசாங்க நிர்வாகத்தில் இணைவதற்கு முன்பு சமூகப் பணிகளிலும் செயற்பாட்டாளராகவும் இருந்துள்ளார். தனது புதிய பொறுப்பில், கூட்டரசு பிரதேச மக்களின் நலன்களை மேம்படுத்தவும், மடானி அரசாங்கத்தின் சீர்திருத்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும் உறுதிபட செயல்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைதளப் பதிவில் சிவமலர் கூறியதாவது:
“பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் நாட்டின் தலைமைச் செயலாளர் முன்னிலையில், பிரதமர்துறையின் (கூட்டரசு பிரதேசம்) அமைச்சரான டத்தோஸ்ரீ டாக்டர் ஸலிஹா முஸ்தபா அவர்களின் அரசியல் செயலாளராக சத்தியப் பிரமாணம் செய்தேன்.
செயற்பாட்டாளரும் வழக்கறிஞரும் என்ற முறையில், இந்த நியமனத்தை ஒரு பெரிய பொறுப்பாகக் காண்கிறேன். மடானி அரசாங்கத்தின் சீர்திருத்தக் கொள்கைகளை நிறைவேற்றுவதிலும், கூட்டரசு பிரதேச மக்களின் நலன்களை வலுப்படுத்துவதிலும் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.
இதுவரை கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், சுகாதார அமைச்சகம், இப்போது கூட்டரசு பிரதேச துறை என நான் கடந்து வந்த பயணம் சவாலானதாய் இருந்தாலும், ஒவ்வொரு கட்டமும் எனக்கு கற்றலும் வளர்ச்சியும் அளித்தது.
இந்த நம்பிக்கையை அளித்த டத்தோஸ்ரீ டாக்டர் ஸலிஹா முஸ்தபா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. கடமை, நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் இந்த பொறுப்பை நிறைவேற்றுவேன்.”

சமத்துவம், பெண்களின் தலைமைத்துவம் மற்றும் பல்துறை பங்களிப்பை வலுப்படுத்தும் புதிய முன்னேற்றமாக இந்த நியமனம் வரவேற்கப்படுகிறது. அரசியலில் பெண்களின் குரலை உயர்த்தும் ஒரு முக்கியமான கட்டமாக சிவமலர் கணபதியின் நியமனம் மலேசிய அரசியலில் நினைவுகூரப்படும்.
-யாழினி வீரா



