
ஷா ஆலாம், 11 பிப்ரவரி — இசை ஜாம்பவான், இசைஞானி இளையராஜா, புடாபெஸ்ட் சிம்ஃபனி இசைக்குழுவுடன் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க இசை விழாவை அரங்கேற்றவுள்ளார். ‘Raaja Rhapsody’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சி, வரும் ஏப்ரல் 5ஆம் தேதி, கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் தேசிய ஹாக்கி அரங்கில் நடைபெறவுள்ளது. Pink Creative நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, இசை ரசிகர்களுக்கு மறக்கமுடியாத தருணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே புடாபெஸ்ட் சிம்ஃபனி இசைக்குழுவுடன் இணைந்து பல படைப்புகளை உருவாக்கி வரும் இளையராஜா, மலேசியாவில் அக்குழுவுடன் சேர்ந்து நடத்தும் முதல் இசை நிகழ்ச்சி இதுவாகும். இது மட்டுமின்றி, இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகளில் முன்னதாகவே பாடல்களின் பட்டியல் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை என Pink Creative நிறுவனத் தோற்றுநர் ரவிவர்மா விக்ரமன் தெரிவித்துள்ளார்.
இந்த இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகள் 15 பிரிவுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.10 பிப்ரவரி தொடங்கி ஏழு நாட்களுக்கு 15% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாகவும், ரசிகர்கள் இதை விரைவில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் அறிவித்தார்.

இந்நிகழ்ச்சி 70-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களின் தோள்களினால் கலைமாமணியாக மலரும் என இளையராஜா உறுதிப்படுத்தியுள்ளார். நேற்று ஷா ஆலம், IRDKL கட்டிடத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புடன் கூடிய இசை நிகழ்ச்சியில், இசை ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சுமார் 500 பேர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்தனர்.
கலைவிருந்தாக விரியும் Raaja Rhapsody, இசை ரசிகர்களுக்கு ஒரு இனிய அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-வீரா இளங்கோவன்