
கோலாலம்பூர், ஏப்ரல் 17 – மலேசியா முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க புதிய முயற்சியாக “வாசிப்பை நேசிப்போம் – நித்திரைக் கதைகள்” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜாலான் செராஸ் முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர் சங்கம் மற்றும் மலேசிய முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர் சங்கம் (PERTAMA) இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். இதன் மூலம், மாணவர்களுக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே வாசிக்கும் ஆர்வத்தை வளர்த்து, வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வாசிப்பை நேசிக்கும் மனப்பான்மையை உருவாக்கும் நோக்கத்துடன் செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
PERTAMA அமைப்பு, தீபகற்ப மலேசியாவின் 530 தமிழ்ப்பள்ளிகளை பிரதிநிதித்துவப்படுத்தி, தமிழ்கல்வி மற்றும் மொழி வளர்ச்சியில் கடந்த 15 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, UPSR மாதிரி வினாத்தாள்கள் வழங்குதல், நூலகப் புத்தகங்களை புதுப்பித்தல் போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
“வாசிப்பை நேசிப்போம் – நித்திரைக் கதைகள்” திட்டத்தின் மூலம், பழைய மாணவசங்கங்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இணைந்து, குழந்தைகளுக்கு கதைகள் வழியாக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கின்றனர். இந்த முயற்சி, மாணவர்களின் மொழி திறனை வளர்ப்பதோடு, தமிழ் கல்வி சூழலைச் செழுமைப்படுத்தும் புதிய முயற்சியாக அமைந்துள்ளது.
திட்டத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளோர், திரு. பார்த்திபன் ராமசந்திரனை 017-6834685 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு “Dimension Book” முகநூல் பக்கம் வழியாக தகவல்களைப் பெறலாம்.
வாசிப்பை நேசிக்கும் தலைமுறையை உருவாக்க வாருங்கள்!
-வீரா இளங்கோவன்