
வாஷிங்டன், 20 பிப்ரவரி — அமெரிக்காவின் அரசாங்கத் திறன் துறையிலிருந்து 20% சேமிப்பை மக்களுக்கு திருப்பி கொடுக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். இந்தத் திட்டம், அமெரிக்க அரசின் நிர்வாகச் செலவுகளை குறைத்து, மக்களுக்கு நேரடி நன்மை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எலான் மஸ்க் தலைமையில் நிர்வாகக் கட்டுப்பாடு
டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, அரசாங்க நிர்வாகத்தை முறையாக கட்டுப்படுத்த, ‘சிறந்த நிர்வாகத்துக்கான துறை’ (DOGE) என்ற அரசு சாரா அமைப்பை உருவாக்கினார். இதன் முக்கிய பணி அரசாங்க செலவுகளை கண்காணித்து வீணாகும் தொகைகளை குறைப்பது. தொழில்துறையின் பிரபல முகமாக உள்ள எலான் மஸ்க் இந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச நிதி உதவிகளை குறைத்த நடவடிக்கை
DOGE நிறுவப்பட்டதிலிருந்தே, அமெரிக்க அரசு வெளிநாடுகளுக்கு வழங்கும் நிதி உதவிகளை கட்டுப்படுத்த தொடங்கியது. இந்த நடவடிக்கையால் அரசாங்கத்தின் செலவுகளை பெரிதும் குறைக்க முடிந்துள்ளது.
மக்களுக்கு திருப்பித் தரும் புதிய திட்டம்
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அரசாங்கத்தின் திறன் துறையில் மேற்கொள்ளப்பட்ட 20% சேமிப்பு, அமெரிக்க குடிமக்களுக்கு வழங்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், மீதமுள்ள 20% அரசு கடன் அடைப்பதற்காக பயன்படுத்தப்படும்.
டிரம்பின் கருத்து
“நாங்கள் ஒரு புதிய முடிவை பரிசீலிக்கிறோம். அரசாங்கத்தின் செலவுகளை குறைத்து, மக்களுக்கு திருப்பித் தருவது முக்கியம். இந்த மாற்றத்தால் பல பில்லியன் டாலர்கள் சேமிக்கப்படுகின்றன,” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-வீரா இளங்கோவன்