
சிரம்பான், 29 மார்ச்: கராத்தே தற்காப்பு கலைப் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று, மாநில மற்றும் தேசிய அளவில் தங்கப் பதக்கங்களை வென்ற பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளி மாணவர் வசந்த் அபிநந்தன், நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

வசந்த் அபிநந்தன், தனது திறமையான ஆட்டத்தால் மாநில அளவில் தொடர்ந்து வெற்றி பெற்று, இரண்டு முறை தேசிய அளவிலும் தங்கம் வென்றுள்ளார். அவரது சிறப்பான சாதனையை பாராட்டும் விதமாக, நெகிரி செம்பிலான் மாநில அரசு சார்பாக, அம்மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறைக்கான அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ முஸ்தாபா நாகூர், வசந்துக்கு மாநில விளையாட்டு சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்தார்.
இளம் வயதில் அற்புதமான சாதனை புரிந்த வசந்த் அபிநந்தன், தனது பயிற்சியையும் முயற்சியையும் தொடர்ந்து கொண்டுபோய், எதிர்காலத்தில் மாநிலத்தை மட்டுமல்ல, நாட்டையே பிரதிநிதித்துவப்படுத்தி பெருமை சேர்க்க வேண்டும் என்று டத்தோ முஸ்தாபா நாகூர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது போன்ற திறமைமிக்க இளம் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் என்றும், மாநில விளையாட்டுத் துறை அத்தகைய பயிற்சி மற்றும் வாய்ப்புகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். வசந்த் அபிநந்தனின் வெற்றி, அவரது கல்வி நிறுவனத்திற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்க்கும் சாதனை என பலரும் பாராட்டியுள்ளனர்.
-யாழினி வீரா