Tazhal Media – தழல் மீடியா

/ Apr 15, 2025
Latest News
tms

வங்கிகள் தற்காலிகமாக தவணை கட்டணங்களை ஒத்திவைக்க வேண்டும் – டாக்டர் சுரேந்திரன்

Picture: Dr. Suren

சுபாங் ஜெயா, 8 ஏப்ரல்: புத்ரா ஹைட்ஸ் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எரிவாயு குழாய் தீ விபத்து, மக்களின் வாழ்க்கையை மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. பல வீடுகள் தீயில் அழிந்த நிலையில், அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் இன்னும் துயரத்திலேயே தவிக்கின்றனர். இந்த பேரழிவில் சிக்கிய வீடுகள் பல இப்போது சீரமைப்பிற்கே சிரமமான நிலைக்கு மாறியுள்ளன. பழுதுபார்க்கும் பணிகள் நீண்ட காலம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான வீடுகளும் வங்கிக் கடனில் கட்டப்பட்டவை என்பதால், இப்போது வீடுகளை இழந்த நிலையில் கூட மக்கள் மாத தவணைகளை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக வங்கிகள், தற்காலிகமாக தவணை கட்டணங்களை ஒத்திவைக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில பிபிபி தலைவர் டாக்டர் சுரேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய டாக்டர் சுரேந்திரன், பிபிபி கட்சி சார்பில் தங்கள் ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார். மேலும், இனம், மதம், மொழி என எந்த வேறுபாடும் பாராமல் மலேசியர்கள் எல்லோரும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகரம் நீட்டும் செயற்பாடுகளை பாராட்டும் வகையில் அவர் தெரிவித்துக்கொண்டார்.

நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க உதவ வேண்டும். வங்கிகள், வாடிக்கையாளர்களின் தற்போதைய நெருக்கடியை புரிந்துகொண்டு மனிதாபிமான அணுகுமுறையுடன் நெருக்கடியை சமாளிக்க உதவ வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

மேலும், இவ்வாறான பேரிடர்கள் மீண்டும் ஏற்படாமல் இருக்க, மாநில அரசும், கூட்டாட்சி அரசும் முழுமையான விழிப்புடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், கட்டமைப்புகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மீளாய்வு செய்ய வேண்டிய தேவையை அவர் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மீண்டும் இயல்புநிலைக்கு திரும்ப, நாங்கள் அவர்களுடன் இணைந்து நிற்போம். இது ஒருவருக்கான அல்ல, நம்மைச் சுற்றியுள்ள சமூகத்திற்கே பொதுவான சவாலாகும்,” என டாக்டர் சுரேந்திரன் குறிப்பிட்டார்.

-வீரா இளங்கோவன்

Scroll to Top