
கோலாலம்பூர், மார்ச் 5: நாட்டில் உற்பத்தித் திறனை மேம்படுத்த தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி (TVET) திறனை விரிவாக்குவது, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெறும் முயற்சிகள், திறன் பயிற்சி மையங்களை உருவாக்குவது போன்ற திட்டங்கள் அவசியம் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இத்திட்டங்கள் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க மட்டுமல்லாமல், தனிநபர் வருமானத்தை உயர்த்தவும் வழிவகுக்கும் என்றார்.
“நிறுவனங்கள் நாடளாவிய அளவில் முதலீடு செய்ய முன்வருகின்றன. அதற்காக சிறந்த தொழில்நுட்ப மையங்களை உருவாக்கும் முயற்சியில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது,” என அவர் கூறினார்.
இந்தத் திட்டங்களில் Nvidia, Google, Microsoft, Infineon போன்ற முன்னணி நிறுவனங்கள் அடங்கும்.
“செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு சவாலான துறை என்பதை ஏற்கிறேன். அதற்கான தெளிவான கொள்கையை உருவாக்கியுள்ளோம். இருப்பினும், அதன் பயன்பாட்டில் சில கட்டுப்பாடுகள் உள்ளன,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
மக்களவை கேள்வி நேரத்தில், மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் எழுப்பிய “ஊதிய உயர்வைத் தாண்டி, அதிக வருமானம் பெறும் நாடாக மலேசியாவை மாற்ற அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?” என்ற கூடுதல் கேள்விக்கு பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.
-கவியரசி கிருஷ்ணன்