
படம் : கூகுள்
வாஷிங்டன், 27 ஜனவரி– அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்கு வெடி குண்டுகள் வழங்குவதற்கு விதித்த தடையை நீக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்திய பிறகு நிலைமை போராக மாறியது. காசா மீது இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதல் நடத்தின. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்தச் சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு 2,000 பவுண்ட் வெடிகுண்டுகளை விநியோகம் செய்வதற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் தடை விதித்திருந்தார். ஏனெனில், சக்திவாய்ந்த அமெரிக்க வெடி குண்டுகள் பாலஸ்தீனத்தின் மீது வீசப்பட்டால், பொதுமக்கள் பாதிக்கக் கூடும் என்று அவர் தடை விதித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் கடந்த வாரம் பதவியேற்றார். அதன்பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார். அவற்றில், இஸ்ரேலுக்கு 2,000 பவுண்ட் வெடிகுண்டுகள் அனுப்புவதற்கு பைடன் விதித்த தடையை நீக்கும்படி ராணுவத்துக்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளாார். இத்தகவலை அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-ஶ்ரீஷா கங்காதரன்