Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

‘பெஸ்டா கொண்டாட்டம்’ தேசிய சாதனைகள் பல உருவாக்கி, மலேசியர்களை ஒன்றிணைத்த கலாச்சார விழா

படம்: ஏற்பாடுக்குழு

கோலாலம்பூர், 24 செப். – மலேசியாவின் பல்சமூக பாரம்பரியத்தையும் ஒற்றுமையையும் கொண்டாடும் வகையில் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் தலைமையில் நடைபெற்ற மலேசியா பண்பாட்டு விழா 2025 இன் ஒரு பகுதியாக, ஐந்து நாள் கொண்ட பெஸ்டா கொண்டாட்டம் செப்டம்பர் 12 முதல் 16 வரை தாமான் தாசிக் திதிவாங்சாவில் வெற்றிகரமாக நிறைவுற்றது.

Pertubuhan Kesenian dan Kebudayaan SRFA அமைப்பு நிறுவனர் நளினி ராதாகிருஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் 70க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. குடும்பங்கள், இளைஞர்கள், குழந்தைகள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என 50,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மகிழ்ச்சியும் ஒன்றிணைப்பும் நிறைந்த சூழலை உருவாக்கினர்.

இந்த விழாவின் முக்கிய சிறப்பம்சமாக, பல தேசிய சாதனைகள் பதிவு செய்யப்பட்டன. செப்டம்பர் 13ஆம் தேதி 4,653 பங்கேற்பாளர்கள் இணைந்து நிகழ்த்திய மிகப்பெரிய கோலாட்டம் நிகழ்ச்சி, மலேசிய சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. இதோடு, நாட்டின் 14 மாநிலங்களிலிருந்தும் உருமி மேளம் குழுக்கள் ஒரே நாளில் ஒரே நேரத்தில் இசையமைத்து, வரலாற்றில் முதன்முறையாக பெரும் சாதனையை படைத்தன.

செப்டம்பர் 14ஆம் தேதி, 55 அடி நீளமும் 35 அடி அகலமும் கொண்ட மலேசியா மதானி குறியீட்டு கோலம் மூன்று மணி நேரத்திலேயே நிறைவேற்றப்பட்டது. இது இன, மத வேறுபாடின்றி மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்ட வலுவான ஒற்றுமையின் அடையாளமாக அமைந்தது.

மேலும், ஒற்றுமை ஓவியப் போட்டி 30க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஓவியங்கள் தேசிய ஒற்றுமை அமைச்சகத்தில் காட்சிக்கு வைக்கப்படும். இதோடு, வீரம் – சிலம்பம் சர்வதேச சாம்பியன் போட்டி 2025 மலேசியா, இந்தியா, இலங்கை வீரர்களுடன் சிறப்பாக நடைபெற்றது.

அதேவேளை, வண்ணத் திருவிழா (ஹோலி), கலை நிகழ்ச்சிகள், சாரி, பாவாடை, வேஷ்டி அணிவகுப்புகள், பாரம்பரிய கண்காட்சிகள் என மக்களை கவர்ந்த பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் இறுதிநாளில் நடைபெற்ற கொண்டாட்டம் விருதளிப்பு விழாவில் 50 கலைஞர்களும் சமூக பங்களிப்பாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த விழா, இந்திய பாரம்பரியத்தையும் மலேசியாவின் பல்துறை பண்பாட்டு ஒற்றுமையையும் தேசிய மட்டத்தில் உயர்த்தி காட்டிய முக்கிய நிகழ்வாக அமைந்தது.

-யாழினி வீரா

Scroll to Top