
கெடா, ஏப்ரல் 17 – பொதுமக்கள் மத்தியில், ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் என்றாலே மருத்துவத்திற்கே ஒதுக்கப்பட்டது என்ற தவறான நம்பிக்கையை மாற்றும் வகையில், “கல்வி யாத்திரை” என்ற நிகழ்வு மஇகா கெடா மாநிலம் சார்பில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து விரிவாக நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், கெடா மாநிலத்தைச் சேர்ந்த 12 மாவட்டங்களில் உள்ள இடைநிலைப்பள்ளிகளில் படிக்கும் படிவம் 4, 5, மற்றும் 6 மாணவர்கள் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அறிவாற்றலை வளர்த்தனர். மாணவர்கள் மூன்று இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதும், கல்வியின் ஒற்றுமைப் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மஇகா மாநிலத் தலைவர் எஸ்.கே. சுரேஸ் கூறுகையில், “ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் தவிர, மேலும் 36 துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கல்விக்கடன் உதவி MIT மூலமாகவும், அரசாங்கம் மூலமாகவும் பெறலாம். மாணவர்களின் குடும்ப வருமான அடிப்படையில் சலுகைகள் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த நிகழ்விற்கு தேசிய மஇகா தலைவர் டான்ஶ்ரீ டாக்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரனும், MIT நிறுவனமும் முழுமையான ஆதரவு வழங்கியுள்ளனர். கல்வி பற்றிய ஆலோசனைகள் தேவைப்பட்டால் தம்மிடம் நேரடியாக தொடர்புகொள்ளலாம் என்றும் சுரேஸ் வலியுறுத்தினார்.
மஇகா உச்சமன்ற உறுப்பினர் எல். சிவசுப்பிரமணியம், ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் இதுவரை 8,000க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கியுள்ளதாக கூறி, இவ்வுலகநிலை நிறுவனம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்த அடித்தளமாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.
-யாழினி வீரா