
கொழும்பு, 20 பிப்ரவரி — இலங்கையில் பிரபல நிழல் உலக தாதா கணேமுல்லே சஞ்சீவா கொழும்பு கோர்ட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சியிடையே, ராணுவ உளவுப்பிரிவைச் சேர்ந்த முகமது அஸ்மன் ஷெர்புதீன் என்பவர் புத்தளம் அருகே கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடளாவிய அளவில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த சஞ்சீவா, சிறப்புப் படையினரால் இன்று கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். கோர்ட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில், சஞ்சீவா கூண்டில் இருந்தபோது, வழக்கறிஞர் போல் இருந்த மர்ம நபர் மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த திடீர் தாக்குதலால் பலத்த காயமடைந்த சஞ்சீவா, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்ததாக தேசிய மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ருக்ஷன் பெல்லானா உறுதி செய்தார்.
சம்பவ இடத்தில் போலீசார் ஒரு ரிவால்வரை மீட்டனர். அதற்குப் பிறகு, சில மணி நேரங்களில், கொலையாளி புத்தளம் பகுதியில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையின் மூலம், அந்த நபர் இலங்கை ராணுவ உளவுப்பிரிவில் பணியாற்றிய முகமது அஸ்மன் ஷெர்புதீன் என்று தெரியவந்தது.
அஸ்மன் ஷெர்புதீன் ஏழு கொலை வழக்குகளில் தேடப்பட்டவராக இருந்ததாகவும், அவருக்கு சஞ்சீவாவுடன் என்ன தொடர்பு இருந்தது என்பதையும், இந்த கொலைக்குப் பின்னுள்ள காரணத்தையும் கண்டறிய தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
— யாழினி வீரா