
சென்னை 19 செப் – தமிழ் சினிமா மற்றும் டிவி உலகில் தனித்துவமான நடிப்பு, நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ரோபோ சங்கர் (46) உடல்நலக்குறைவால் நேற்று வியாழக்கிழமை காலமானார்.
சில நாட்களாக மஞ்சள் காமாலை காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், உடல் நிலை மோசமடைந்ததால் சென்னையின் பெருங்குடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு அதிகரித்ததால், இன்று காலை சுமார் 8.30 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டது.
மறைவிற்கு முன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் தர்ஷன் நடிப்பில் உருவாகும் ‘காட்ஜில்லா’ படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிவி நிகழ்ச்சிகளின் மூலம் நகைச்சுவை நடிகராக மக்களிடையே அறிமுகமான ரோபோ சங்கர், 2007 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த ‘தீபாவளி’ படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார். அதன் பின் விஜய் நடித்த ‘புலி’, அஜித் நடித்த ‘விஸ்வாசம்’, தனுஷ் நடித்த ‘மாரி’ போன்ற பல வெற்றி படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
அவரது மறைவு திரையுலகத்தையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரோபோ சங்கரின் உடல் இன்று இரவு அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
-ஸ்ரீ தரன்


