Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

காஜாங்கில் குடும்பத் தகராறு: கணவரை குத்திக்கொன்ற பெண் கைது

Picture: Bernama

காஜாங், 18 பிப்ரவரி — குடும்பத் தகராறு காரணமாக ஒரு பெண் தனது கணவரை குத்திக்கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காஜாங் போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசொப், பொதுமக்களிடம் இருந்து காலை 11.05 மணிக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, போலீசாரும் தடவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாக கூறினார்.

அங்கு சென்ற பிறகு, 60 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை உறுதிப்படுத்தியதாக அவர் தெரிவித்தார். கொலை செய்ய பயன்படுத்தப்பட்டிருக்கும் என சந்தேகிக்கப்படும் ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட சில பொருட்களும் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டன.

59 வயதான உயிரிழந்தவரின் மனைவி கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உதவுவதற்காக வரும் வெள்ளிக்கிழமை வரை ஐந்து நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் உடல் செர்டாங் மருத்துவமனையில் அவசர சிகிச்ச்சைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டு, மாலை 12.30 மணிக்கு நடந்த பிரேத பரிசோதனையில் பல இடங்களில் குத்துதல் காரணமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

தகவல் தெரிந்தவர்கள் ஏஎஸ்பி முகமட் ஹாபீஸ் ஹம்ஸாவை 019-6556536 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளிக்கலாம் என நாஸ்ரோன் கேட்டுக் கொண்டார்.

-வீரா இளங்கோவன்

Scroll to Top