
திரெங்கானு, 18 பிப்ரவரி — திரெங்கானு போலீஸ் தலைமையின் மாதாந்திர கூட்டத்தில் பேசிய மாநில போலீஸ் தலைவர் மொஹ்த் கைரி, “பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களில் பெரும்பான்மையாக ச்யாபு மற்றும் யாபா மாத்திரைகள் உள்ளன. இவை மற்ற போதைப்பொருள்களை விட குறைந்த விலையில் எளிதாக கிடைக்கக்கூடியவை,” என்று தெரிவித்தார்.
அவரது தகவலின்படி, போதைப்பொருள் தொடர்பான கைது எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 10,327 ஆக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் இது 11,893 ஆக அதிகரித்துள்ளது. “இதில், ஆபத்தான போதைப்பொருள் (சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள்) சட்டம் 1985ன் கீழ் 56 போதைப்பொருள் கடத்தலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
இதேபோல், வணிக மோசடி சம்பவங்களும் கடந்த ஆண்டு அதிகரித்துள்ளன. 2023ஆம் ஆண்டில் 1,237 வணிக மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது, இதன் மூலம் RM33.76 மில்லியன் இழப்பு ஏற்பட்டது. 2024ஆம் ஆண்டில், இவ்வகை குற்ற வழக்குகள் 7.51% அதிகரித்து 1,330 ஆக உயர்ந்ததோடு, இழப்பும் RM42.06 மில்லியனாக உயர்ந்துள்ளது.
வணிக மோசடி தொடர்பான கைது எண்ணிக்கையும் 2023ஆம் ஆண்டில் 710 ஆக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் இது 742 ஆக அதிகரித்துள்ளதாக மொஹ்த் கைரி தெரிவித்தார்.
-வீரா இளங்கோவன்