
இந்தோனேசியா, 27 ஜனவரி — மலேசிய ஆண்களின் டப்பிள்ஸ் ஜோடி மான் வெய் சோங்-டி கை வுன், உலகின் நான்காவது இடத்தில் உள்ள பாஜார் ஆல்ஃபியான்-முகமது ரியான் ஆர்டியாண்டோ ஜோடியை வென்று, இந்தோனேசியா மாஸ்டர்ஸ் 2025 பட்டத்தை தட்டிச்சென்றனர்.
இஸ்டோரா செனாயான் விளையாட்டு மையத்தில் நடந்த இந்த பரபரப்பான இறுதிப் போட்டியில், உலகின் 13வது நிலை வீரர்களான வெய் சோங்-கை வுன் அசத்தலான ஆட்டத்தைக் காண்பித்து நேரடியாக இரண்டு செட்களில் வெற்றி பெற்றனர். முதல் செட்டின் ஆரம்பம் கடுமையாகவே இருந்தாலும், வெய் சோங்-கை வுன் தங்களின் ஆட்டத்தை மேம்படுத்தி 21-11 என்ற கணக்கில் செட்டைக் கைப்பற்றினர்.
இரண்டாம் செட்டில், அவர்கள் தங்களின் அமைதியையும் மன உறுதியையும் நிலைநிறுத்தி, 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர். வெற்றி பெறுவதற்கு மொத்தம் 38 நிமிடங்கள் மட்டுமே எடுத்தனர்.
போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வெய் சோங், இந்த ஜோடியை முந்தைய ஐந்து சந்திப்புகளில் முதல் முறையாக தோற்கடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டார். “அவர்கள் ரசிகர்கள் மத்தியில் தங்கள் ஆதரவைப் பெற்றிருந்தாலும், நாங்கள் எங்கள் ஆட்டத்தில் முழு கவனத்தை செலுத்தினோம். இத்துடரின் போது பல தவறுகளை செய்தோம், ஆனால் அதைச் சரி செய்ய வேலை செய்ய உள்ளோம்,” என்று அவர் கூறினார்.
“ஒவ்வொரு ஷாட்டிலும் கவனம் செலுத்தி, எதிராளிகளை அழுத்தத்தின் கீழ் வைத்தோம்,” என்று கை வுன் கூறினார்.
இப்போது, இந்த ஜோடி பாட்மின்டன் ஆசிய அணித் தொடருக்கான (BATC) தகுதிப்பட தயாராகி வருகிறார்கள், மேலும் அங்கு தங்களின் திறமையை மீண்டும் நிரூபிக்க முனைவதாகத் தெரிவித்தனர்.
-பெர்னாமா