
கேமாமான், 26 ஜனவரி — மாற்றுத்திறனாளி ஒருவர் தாக்கப்பட்ட விவகாரத்துக்கு தொடர்புடைய மிரட்டல் கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவேற்றியதாகக் கூறப்படும் ஒரு சமூக வலைதளப் பிரபலம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேமாமான் மாவட்ட காவல் தலைவர் டி.எஸ்பி வான் முகமட் வான் ஜாஃபார், 36 வயதான அந்த நபரை இன்று காலை ஜொகூர் மாநிலம் செகாமட் பகுதியில் உள்ள ஓர் ஹோட்டலில் காலை 6.55 மணிக்கு கைது செய்ததாக தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்க தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. குற்றவாளி நாளை வரை காவலில் இருக்கிறார் என்று கூறினார்.
“ஜனவரி 23 அன்று, தாக்குதல் சம்பவத்துக்கு தொடர்பான மிரட்டல் கருத்து சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டதாக ஒரு புகார் பெற்றோம். எந்தச் சமூக பின்னணியிலும் மக்கள், பொதுமக்களிடம் பயத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை வெளியிட வேண்டாம் என நான் அறிவுறுத்துகிறேன்,” என்று அவர் தனது அறிக்கையில் கூறினார்.
இதேவேளையில், தெரங்கானு மாநில வீடமைப்பு, சுகாதாரம் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைத் தலைவர் டத்தோ வான் சுகைரி வான் அப்துல்லா, தாக்குதல் பாதிப்படைந்த 47 வயதான அகமத் நூர் அல் ஃபைசான் ஜுசோ கேமாமான் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், அவர் தற்போது உடல் நிலையில் தேறி வருவதாகவும் தெரிவித்தார்.
“நேற்று வரை, மருத்துவமனையுடன் தொடர்பில் இருந்தேன். பாதிக்கப்பட்டவரின் மருத்துவ அறிக்கை எப்போது முடிவடையும் என்று இன்னும் குறிப்பிட்ட தேதி கிடையாது,” என்று அவர் கூறினார்.
இந்த வழக்கின் விசாரணை அறிக்கைகள் வழக்குத் துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், முழுமையான மருத்துவ அறிக்கையின்றி அவை திருப்பி அனுப்பப்பட்டதாக முன்பு வான் முகமட் தெரிவித்திருந்தார்.
-வீரா இளங்கோவன்