
கோலாலம்பூர், 26 பிப்ரவரி — மலேசியத் தமிழ் இலக்கியத்தை உலக அரங்கில் அறிமுகம் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ் பேசும் நாடுகளின் தூதர்களுடன் மரியாதை நிமித்தமான சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறோம் என்று மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு மொரிசியஸ் மற்றும் இந்திய தூதர்களை சந்தித்த சங்கத்தின் பிரதிநிதிகள், நேற்று காலை மலேசியாவிற்கான இலங்கை இடைக்கால தூதர் மேதகு எம்.ஐ. முகமட் ரிஷ்வி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் சங்கத்தின் தலைவர் மோகனன் பெருமாள், செயலாளர் குமாரி சாந்தா காளியப்பன், பொருளாளர் திரு. முனியாண்டி, மேனாள் தலைவர் திரு. இராஜேந்திரன், துணைப் பொருளார் திரு. மு. காசிவேல், செயலவை உறுப்பினர் திரு. மன்மதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சந்திப்பின் போது, மலேசிய மற்றும் இலங்கை தமிழ் இலக்கியங்களை இணைக்கும் புதிய முயற்சிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் இடையே கருத்துப் பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தீர்மானிப்பது முக்கிய அம்சமாக இருந்தது.
மேலும், இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை, பொருளாதார வாய்ப்புகள், மற்றும் தமிழ் மொழியின் நிலைமையைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இணைந்த பணிகள் மேற்கொள்ளுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இச்சந்திப்பு இரு நாடுகளுக்கிடையே உள்ள கலாச்சார மற்றும் இலக்கியப் பிணைப்புகளை வலுப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தொடர்ந்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொண்டு, அதனை உலகளாவிய ரீதியில் உயர்த்தும் முயற்சிகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-யாழினி வீரா