
ஷா ஆலாம், 7 ஏப்ரல்: ஷா ஆலமில் உள்ள கம்பொங் மலாய் சுபாங் மற்றும் சுபாங் பெர்டானா பகுதிகளில் கடுமையான புயல் தாக்கியதைத் தொடர்ந்து, சுங்கை புலோ மக்கள்சேவை மையம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, புயலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆரம்ப நிவாரண உதவிகளை வழங்கியது.
தொழில்முனைவோர் வளர்ச்சி மற்றும் கூட்டுறவுத் துறை துணை அமைச்சர் மற்றும் சுங்கை புலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ ஆர்.ரமணன் வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு வீடுகள் மற்றும் பொது வசதிகள் புயலால் சேதமடைந்ததாகவும், அதிர்ச்சி அளிக்கும்படி உயிரிழப்புகள் இல்லை என்றும் கூறினார்.
பெத்தாலிங் மாவட்ட நில அலுவலகம், ஷா ஆலம் நகராட்சி, தீயணைப்பு மற்றும் மீட்புப் படை, சமூக நலத்துறை மற்றும் போலீசாருடன் இணைந்து அனைத்து தேவையான உதவிகளும் – உணவு, தங்குமிடம், தளவாட பொருள்கள் உள்ளிட்டவை ஒருங்கிணைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
“நோன்பு பண்டிகையை முன்னிட்டு இந்த சம்பவம் மக்களிடம் கவலையும், பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் உணர்வுகளை நன்கு புரிந்துகொள்கிறேன். இந்த சூழ்நிலையில் ஒன்றுபட்டிருப்பதே நமது வலிமை,” என்றார்.
தாமும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மக்களை சந்திக்க இருப்பதாக ரமணன் தெரிவித்தார். தேவைகள் அல்லது உதவிக்கான கோரிக்கைகள் சுங்கை புலோ மக்கள்சேவை மைய வாட்ஸ்அப்பில் (014-963 7107) தொடர்புகொள்ளலாம் எனவும் அவர் அறிவித்தார்.
-யாழினி வீரா