
கோலாலம்பூர், 9 பிப்ரவரி — 2012ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றச் சட்டத்தின் (சொஸ்மா) கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் எனக் கருதப்படும் சிலர், சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு முன்பாக மறியல் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்.
சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது ஹாபிஷ் முகமது நோர் வெளியிட்ட அறிக்கையின் படி, சுமார் 40 முதல் 50 பேர் கொண்ட குழுவினர், சிறார்கள் உள்பட, நேற்று காலை 8.10 மணியளவில் பதாகைகள் ஏந்தி மறியலில் ஈடுபட்டனர்.
சொஸ்மா சட்டத்தை ரத்து செய்ய அரசு மீது அழுத்தம் கொடுப்பதற்காக இந்த போராட்டம் நடைபெற்றது என்று தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக அவர் கூறினார். மறியலில் ஈடுபட்டவர்கள், சொஸ்மா சட்டத்தின் கீழ் சிறையில் உள்ள கைதிகளின் குடும்பத்தினர் என சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
இதுபோன்ற பேரணிகள் முன்னதாக காவல்துறையின் அனுமதி பெறாமல் நடத்தப்படும்பட்சத்தில், ஏற்பாட்டாளர்களுக்கு 10,000 மலேசிய வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று அவர் எச்சரித்தார்.
மறியல் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள், விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் நுர்லியானா ஷாரிபுடினை 010-8435654 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் அளிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
சொஸ்மா சட்டத்தின்கீழ் கைதிகளைக் காண்பதற்கான விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டதற்கும், அந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கைதிகளின் குடும்பத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-வீரா இளங்கோவன்