Tazhal Media – தழல் மீடியா

/ Mar 06, 2026
Latest News
tms

ஆசிய பள்ளி சதுரங்கப் போட்டியில் ஜெனிவன் ஜென்கேஸ்வரன் சாம்பியன் பட்டம்

கோலாலம்பூர், 3 நவ. – மலேசியாவை பெருமைப்பட வைத்த இளம் சதுரங்க வீரர் ஜெனிவன் ஜென்கேஸ்வரன், 19வது ஆசிய பள்ளிகள் சதுரங்க சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். மங்கோலியாவில் நடைபெற்ற இந்த போட்டியில், U17 ஆண் பிரிவில் அவரின் சிறந்த ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இளம் வயதிலேயே தனது திறமையால் பலர் மத்தியில் தனித்துவமாக விளங்கும் ஜெனிவன், இதற்கு முன்பு “Candidate Master” பட்டத்தை பெற்றிருந்தார். ஆனால் இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் அவர் “FIDE Master” என்ற உயரிய பட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளார். இது அவரின் சதுரங்க வாழ்க்கையில் முக்கியமான மைல் கல்லாக கருதப்படுகிறது.

மலேசிய சதுரங்க சம்மேளனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்ததாவது, ஜெனிவனின் கடின உழைப்பும், தொடர்ந்த பயிற்சியும் அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளன. மேலும் அவர் எதிர்காலத்தில் சர்வதேச அளவிலான பல போட்டிகளில் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்துவார் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இப்போட்டியில் பல ஆசிய நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். அந்தப் போட்டியில் தனது ஒவ்வொரு ஆட்டத்திலும் உற்சாகத்துடன் விளையாடிய ஜெனிவன், இறுதியில் எதிரிகளை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

மலேசிய இளைஞரின் இந்த சாதனை, நாட்டின் விளையாட்டு வரலாற்றில் புதிய ஒளியைப் பரப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகள் மழைபோல் குவிந்துள்ளன.

-யாழினி வீரா

Scroll to Top