
கோலாலம்பூர், 30 ஜனவரி — மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் வருடாந்திர குடும்ப தின விழா, மஇகா தேசிய துணைத் தலைவர் மற்றும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் ரிஷியாகாரன், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி பாட்சிலின் சிறப்பு அதிகாரி டத்தோ இ. சிவபாலன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்பான் தலைவருமான சார்ல்ஸ் சந்தியாகோ, ஜெயபக்தி நிறுவன உரிமையாளர் கு. செல்வராஜ், ரத்னவள்ளி அம்மையார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
தமிழ் பத்திரிகையாளர்கள் எதிர்கொண்டுவரும் சவால்களை தனது உரையில் விவரித்த டத்தோஸ்ரீ சரவணன், சங்க வளர்ச்சிக்கு தனது முழு ஆதரவை தெரிவித்ததோடு, ரூம் 5,000 நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார்.
விழாவின் சிறப்பு நிகழ்வாக, தமிழ் ஊடகங்களில் நீண்ட காலமாக சேவை ஆற்றிய ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு கௌரவிப்பு விழா நடைபெற்றது. டத்தோஸ்ரீ சரவணன் அவர்களுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். சங்க வளர்ச்சிக்கு துணைநின்றவர்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பத்திரிகையாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கலந்துகொண்ட இவ்விழாவில், சேலை மற்றும் சுடிதார் அழகு ராணிப் போட்டி, சிறார்களுக்கான நடனப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
சங்கத் தலைவர் செ. வே. முத்தமிழ்மன்னன் தலைமையில் நிர்வாகக் குழுவினர் இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்தனர். 2014ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சங்கத்தில் 170க்கும் மேற்பட்ட அச்சு மற்றும் மின்னியல் ஊடக உறுப்பினர்கள் உள்ளனர். மேலும், தகவல் தொடர்பு அமைச்சின் ‘காசே ஹாவானா’ அறநிதித் திட்டத்தின் மூலம் பல நலிவுற்ற உறுப்பினர்கள் உதவிகளை பெற்றுள்ளனர்
-வீரா இளங்கோவன்