
கோலாலம்பூர், 16 பிப்ரவரி — நாட்டில் இனவாதம் மற்றும் இனங்களுக்கிடையிலான பாகுபாடு அதிகரித்து வருவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று தொடர்பு அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்ட, இந்தியர்களை கீழ்த்தரமாகக் குறிப்பிடும் விதத்தில் சோளம் விற்பவரின் வீடியோ குறித்து அவர் ஆழ்ந்த ஆதங்கத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தார்.
“இனவாதம் என்பது ஒரு நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் விஷயமாகும். இத்தகைய செயல் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இன, மத பேதங்களை தூண்டும் செயல்கள் மலேசிய சமூகத்திற்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்,” என அவர் வலியுறுத்தினார்.
இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதால் சமூகத்தினுள் பகைமை உருவாகும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார். எந்த சமுதாயத்தினரையும் அவமதிக்கும் அல்லது பாகுபாடு காட்டும் செயல் சமூக அமைதிக்கே நேரடி அச்சுறுத்தலாக இருக்கும் என்பதைக் குறிப்பிட்ட அவர், இவ்வாறான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை எந்தவிதத்திலும் ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
அத்துடன், நாட்டில் ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையை ஊக்குவிக்க சமூகத் தலைவர்கள், மதத் தலைவர்கள், அனைத்து மலேசியர்களும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என கோபிந்த் சிங் அழைப்பு விடுத்தார். “ஒவ்வொரு மலேசியரும், எந்த இன, மத, மொழி வேறுபாடின்றியும், கண்ணியமாக நடத்தப்பட வேண்டும். இதுதான் நம் நாட்டின் அடிப்படை மதிப்பீடு,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மலேசியாவின் நிலையான வளர்ச்சி மற்றும் சமூக சுபீட்சத்திற்கான அடிப்படை ஒற்றுமைதான் என்று அவர் மேலும் கூறினார். “நம் தேசம் வளமாகவும், நிலையாகவும் வளர முடிவதற்கான முக்கியக் கொள்கைகள் ஒற்றுமை, புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவை. இதனை மலேசியர்கள் அனைவரும் முழுமையாக பின்பற்ற வேண்டும்,” என்று கோபிந்த் சிங் கூறினார்.
மலேசியா பல இனங்கள், மதங்கள், மொழிகள் ஆகியவற்றின் கலவையைக் கொண்ட நாடாக விளங்குகிறது. இதனை நம் பலமாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, சமூகத்தினுள் இன வெறியை தூண்டும் நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாகக் கூறினார்.
நாட்டின் ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்காக, இனவாதச் செயல்களை தடுக்கும் வகையில் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும், சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களில் இத்தகைய விஷயங்களை பரப்புபவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
“மலேசியாவின் ஒற்றுமை என்பது மிகப்பெரிய சொத்து. அதை காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றாகச் செயல்பட வேண்டும்,” என்று கோபிந்த் சிங் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.
-யாழினி வீரா