
செத்தியவான், மே 8: மஞ்சோங் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வரும் மே 11ஆம் தேதி காலை 8.05 மணிக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு, நேற்று ஆலயத்தில் திருப்பணி நிறைவு விழா மற்றும் வேல் பூஜை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

அலங்காரங்கள், புதுப்பிக்கப்பட்ட கட்டட அமைப்புகள் மற்றும் யாகசாலை ஏற்பாடுகள் ஆகியவை முழுமையடைந்த நிலையில், திருப்பணி நிறைவு நிகழ்வு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, வேல் பூஜை, வழிபாட்டு நிகழ்ச்சிகள், வேத பாடல்கள் மற்றும் தீபாராதனைகள் சிறப்பாக இடம்பெற்றன.

இந்நிகழ்வில் “மக்கள் கலைஞர்” கவிமாறன் அவர்கள் சிறப்பு அழைப்பின்பேரில் கலந்து கொண்டு அருளாசிகள் பெற்றார். பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு விநாயகர், முருகன் மற்றும் சிவனின் அருளைப் பெறத் தங்கள் பக்தியையும் ஈர்ப்பையும் வெளிப்படுத்தினர்.
மே 11ஆம் தேதியன்று நடைபெறும் மகா கும்பாபிஷேக விழாவில், பல்வேறு பக்தர்கள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்க உள்ளனர். அந்த நாள் சிறப்பு யாகங்கள் மற்றும் அபிஷேக பூஜைகள் மூலம் ஆன்மிக மகிழ்ச்சி பரிமாறப்படும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
-யாழினி வீரா