Tazhal Media – தழல் மீடியா

/ Apr 19, 2025
Latest News
tms

மக்களின் வாழ்வியலிலும் வாசிப்பு ஒரு பகுதியாக வர வேண்டும் – டத்தோ அன்புமணி பாலன்

Picture: Veera

பிரிக்பீல்ட்ஸ், ஏப்ரல் 17 – தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட “வாசிப்பை நேசிப்போம் – நித்திரைக் கதைகள்” என்ற திட்டம் நேற்று பிரிக்பீல்ட்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த விழாவில் தொழில் முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சரின் தனிச்செயலாளராக பணியாற்றும் டத்தோ அன்புமணி பாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

தன் உரையில் அவர், “ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வாசிப்பு பழக்கம் என்பது அடிப்படையாக இருக்கிறது. இந்தக் கலாசாரம் குழந்தைப் பருவத்தில் இருந்து ஏற்படுத்தப்பட வேண்டும். வாசிப்பு என்பது அறிவை வளர்க்கும் கருவியாக மட்டுமின்றி, வாழ்க்கையை மேம்படுத்தும் முக்கிய தூண்டுகோலாகவும் செயல்படுகிறது,” எனக் கூறினார்.

மேலும், “இதுபோன்ற சமூக நன்மை கொண்ட திட்டங்களுக்கு தொழில் முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு முழுமையான ஆதரவை வழங்கும். இத்தகைய முயற்சிகள், மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களையும் நேர்மறையாக பாதிக்கும்,” என தெரிவித்தார்.

அவரது உரையில், “இந்த வாசிப்பு திட்டங்களை நாட்டில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதையே நம்முடைய நோக்கமாக்க வேண்டும். தமிழ்ப்பள்ளிகள் மட்டும் இல்லாமல், மக்களின் வாழ்வியலிலும் வாசிப்பு ஒரு பகுதியாக வர வேண்டும்,” என்றார்.

மேலும், பெண்கள் அரசியல் மற்றும் வணிகத் துறைகளில் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். “நாட்டில் அதிகமான பெண்கள் தொழில்துறையில் முன்னேற, தொழில் முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் திட்டங்களைப் பற்றி தெரிந்து கொண்டு அதனடிப்படையில் பயனடைய வேண்டும். இது அவர்களின் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் நன்மையைத் தரும்,” என தெரிவித்தார்.

இந்த விழா வாசிப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் முன்னிறுத்தியதோடு, தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் முயற்சிகளுக்குப் புதிய திசையை ஏற்படுத்தியது.

-வீரா இளங்கோவன்

Scroll to Top