
பினாங்கு, 11 பிப்ரவரி — ஜனநாயக செயற்கட்சி துணைத் தலைவர் மற்றும் இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ, தனது துணைவியாருடன் இணைந்து பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ தண்டாயுதபாணி கோவிலில் நடைபெற்ற தைப்பூச இரத ஊர்வலத்தில் கலந்துகொண்டார். திருமுருகனின் அருளைப் பெற பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்ட நிலையில், அமைச்சரும் அவரது துணைவியாரும் பக்தர்களுடன் இணைந்து பிரார்த்தனை செய்தனர்.
வழியெங்கும் முருகனின் திருவருளை வேண்டி பக்தர்கள் அர்சனை செய்யும் திருசேவையும், தேங்காய் உடைக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன. தைப்பூசத் திருவிழாவுக்குப் புகழ்பெற்ற அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் (தண்ணீர்மலை கோவில்) பல நூற்றாண்டுகளாக வெகு விமரிசையாக இந்த விழாவை கொண்டாடி வருகிறது.
இந்த ஆண்டு, மக்கள் விழாவைக் காணும் வசதிக்காக இலக்கவியல் அமைச்சின் ஆதரவில் ஆலய வளாகத்தில் அகண்ட மின்னியல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருக்கோவில் சுற்றுவட்டாரத்தில் பக்தர்கள் திரளாக கூடும் நிலையில், அவர்கள் விழாவின் முக்கிய நிகழ்வுகளை தெளிவாகக் காணலாம் என்ற நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமய கலாச்சார விழாக்களுக்கு தொழில்நுட்ப உதவியை வழங்கும் இந்த முயற்சி, பக்தர்களுக்குப் பெரும் நன்மையாக இருப்பதாகவும், இது வழிபாட்டு அனுபவத்தை மேலும் மெருகூட்டும் எனவும் கோபிந் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
-வீரா இளங்கோவன்