
கோலாலம்பூர், 8 பிப்ரவரி — மலேசியா தேசிய தொழில்முனைவோர் நிதியமான TEKUN Nasional-க்கு ஒதுக்கப்பட்ட RM100 மில்லியனில் இருந்து இதுவரை RM3.6 மில்லியன் தொகை 143 இந்திய தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.
இந்த நிதி, இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம் (SPUMI) மற்றும் SPUMI Goes Big ஆகிய திட்டங்களின் கீழ் விண்ணப்பித்த தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டதாக அவர் கூறினார். இதுவரை RM555,000 தொகை 14 தொழில்முனைவோருக்கு SPUMI Goes Big திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளதோடு, RM3.061 மில்லியன் தொகை 129 தொழில்முனைவோருக்கு SPUMI மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த RM100 மில்லியன் ஒதுக்கீடு முழுமையாக பயன்படுவதை உறுதி செய்ய, SPUMI மற்றும் SPUMI Goes Big ஆகிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த மாதந்தோறும் கண்காணிப்பு கூட்டத்தைக் கொண்டு வரும் என்று ரமணன் தெரிவித்தார்.
முந்தைய அறிவிப்பின்படி, இந்த ஒதுக்கீட்டில் RM50 மில்லியன் SPUMI-க்கும், RM50 மில்லியன் SPUMI Goes Big-க்கும் வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த உருவாக்கப்பட்டதாக அவர் கூறினார். இந்த ஆண்டு சுமார் 5,000 தொழில்முனைவோருக்கு இத்திட்டங்கள் பயனளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வட்டியில்லா கடனுக்காக ஆர்வமுள்ள இந்திய தொழில்முனைவோர் TEKUN இணையதளம் அல்லது அருகிலுள்ள TEKUN அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம். SPUMI திட்டத்தின் கீழ் RM1,000 முதல் RM50,000 வரை, SPUMI Goes Big திட்டத்தின் கீழ் RM50,000 முதல் RM100,000 வரை கடனுதவி வழங்கப்படும். மேலும், 14 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் ஒப்புதல் அளிக்கப்படும் என அவர் கூறினார்.
இத்திட்டங்களின் தொடர்ச்சியான செயல்பாட்டிற்காக, கடனுதவி பெற்ற தொழில்முனைவோர் உரிய நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். TEKUN புதிய நிதியளிப்பு இல்லாமல் சொந்த நிதியுடன் செயல்படுவதால், திருப்பிச் செலுத்த தவறினால் எதிர்காலத்தில் வேறு தொழில்முனைவோருக்கு உதவ முடியாது என்று அவர் எச்சரித்தார்.
– வீரா இளங்கோவன்