
பெட்டாலிங் ஜெயா, மே 7: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான அதிகரித்த பாதுகாப்பு பதற்றத்தைத் தொடர்ந்து, அமிர்தசர் விமான நிலையம் மே 7 முதல் 9ம் தேதி வரை மூடப்பட்டுள்ளதால், மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் பாத்திக் ஏர் விமான நிறுவனங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு செல்லும் சில விமானங்களை இடைநிறுத்தியுள்ளன.
மலேசியா ஏர்லைன்ஸ், அமிர்தசருக்கான அனைத்து வருகை மற்றும் புறப்பாடு விமான சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. பயணிகள் மற்றும் விமான குழுவினரின் பாதுகாப்பே முக்கியம் என தெரிவித்த நிறுவனம், நிலவரங்களை கவனமாக கண்காணித்து வருவதாகக் கூறியது. பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதால், லண்டன் ஹீத்ரோவுக்கும், பாரிஸ் சார்ல்ஸ் டி கோல் விமான நிலையத்திற்குமான MH2 மற்றும் MH22 ஆகிய விமானங்கள், தற்சமயம் கத்தாரின் தோஹாவில் இடைநிறுத்தம் செய்து பின்னர் பயணத்தைத் தொடர்ந்துள்ளன.
இதற்கிடையில், பாட்டிக் எயரும் மே 7 மற்றும் 8 தேதிகளில் அமிர்தசர் மற்றும் லாஹோர் இடையே இயக்கப்படும் சில விமானங்களை ரத்து செய்துள்ளது. பாதிக்கப்பட்ட சேவைகள்:
- OD131 (கோலாலம்பூர்–லாஹோர்)
- OD132 (லாஹோர்–கோலாலம்பூர்)
- OD271 (கோலாலம்பூர்–அமிர்தசர்)
- OD272 (அமிர்தசர்–கோலாலம்பூர்)
இந்த பதற்றமான சூழ்நிலைக்கான காரணமாக, இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளை தாக்கியதைக் தொடர்ந்து, பாகிஸ்தான் ஐந்து இந்திய போர் விமானங்களை வீழ்த்தியதாகவும், கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இருநாட்டு மோதல் தீவிரமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பயணிகள் பாதுகாப்பிற்காக விமான நிறுவனங்கள் புதிய முடிவுகளை எடுத்து வருகின்றன.
-யாழினி வீரா