
கோலாலம்பூர், 6 மார்ச் — மலேசியாவில் சமீபத்தில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவமாக, சமய போதகர் ஜம்ரி வினோத், தைப்பூசத் திருவிழாவில் இந்துக்கள் “வேல் வேல்” என்று கோஷமிடுவதை, போதையில் அல்லது பேய் பிடித்தவர்களுடன் ஒப்பிட்டு அவமதித்துள்ளார். இதற்கு தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்ரியின் அறிக்கைகள் மிகப்பெரிய அவமதிப்பாகவும், பொறுப்பற்றவையாகவும் உள்ளன என கூறினார். இது, மடானி அரசாங்கம் கடைப்பிடிக்கும் 3ஆர் (இனம், மதம், அரசியல்) கொள்கைக்கு முரணானது. இவ்வாறான பிரச்சனைகளை புறக்கணிக்க முடியாது, மேலும் இது சமூக நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ஜம்ரியின் இந்த ஒழுங்கற்ற செயலுக்கு உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஏற்கனவே ஜம்ரி மீது பல புகார்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது முதல் முறை அல்ல, அவர் தொடர்ச்சியாக இந்து சமயத்தை இழிவுபடுத்தி வருகிறார். இவ்வாறு ஒவ்வொரு முறையும் தவிர்க்க முடியாத சாக்குகளை முன்வைத்து தப்பித்துக்கொள்ளும் முயற்சி இனி தொடரக்கூடாது. அதனால், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஜம்ரிக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் என சரவணன் வலியுறுத்தினார்.
-கவியரசி கிருஷ்ணன்