
புத்ராஜெயா: பேங்க் நெகாரா மலேசியா (BNM) கடந்த ஆண்டில் 5.2 மில்லியனைத் தாண்டிய பன்னாட்டு QR குறியீடு பரிமாற்றங்களை பதிவு செய்துள்ளதாக அதன் ஆளுநர் அப்துல் ரஷீத் கஃபூர் இன்று தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை 2023ம் ஆண்டை விட நான்கு மடங்கு அதிகம் என அவர் குறிப்பிட்டார். இது மலேசியா மற்றும் ஆசியாவின் வர்த்தக, முதலீட்டு வளர்ச்சிக்கு முக்கிய ஊக்கமாக இருக்கிறது என்றும், பயணிகளுக்கும் எளிதான, நம்பிக்கையூட்டும் டிஜிட்டல் கட்டண முறையை வழங்குவதாகவும் அவர் கூறினார்.
இன்று தொடங்கிய மலேசியா–கம்போடியா QR குறியீட்டு கட்டண இணைப்பின் இரண்டாம் கட்டம் மூலம், மலேசிய பயணிகள், KHQR குறியீட்டை ஸ்கேன் செய்து, கம்போடிய வர்த்தகர்களிடம் நேரடி கட்டணங்களைச் செய்ய முடியும்.
அதேபோல், கம்போடிய பயணிகள், மலேசிய வர்த்தகர்களிடம் DuitNow QR குறியீட்டை பயன்படுத்தி, Bakong செயலி வாயிலாக கட்டணங்களைச் செய்ய முடியும். இந்த வசதி 2023ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய முதல் கட்டத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டது.
மலேசியா தற்போது சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா மற்றும் இந்தியோனேசியா போன்ற நாடுகளுடனும் இதேபோன்ற பன்னாட்டு QR கட்டண இணைப்புகளை மேற்கொண்டுள்ளது.
இந்த ஆண்டு, BNM முக்கியத் தலையாயதாகக் கொள்ளும் விஷயம், ASEAN நாடுகளுடனான கட்டண இணைப்புகளை அதிகரிப்பது மற்றும் பாதுகாப்பான கட்டண சூழலை உருவாக்கும் நடவடிக்கைகளை உறுதி செய்வது என ரஷீத் கூறினார்.
இந்த பன்னாட்டு QR குறியீடு பரிமாற்றங்கள், பழைய பண பரிமாற்ற முறைகளை முந்தி, புதிய டிஜிட்டல் கட்டண உலகத்தை வலுப்படுத்தும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-கவியரசி கிருஷ்ணன்