
கோலாலம்பூர், 7 நவ. – UPSI மாணவர்களைச் சேர்ந்த பேருந்து விபத்துடன் தொடர்புடைய ஒரு பயண நிறுவனம், உரிமம் இல்லாத நிறுவனத்துக்கு அனுமதி இல்லாமல் பேருந்து அனுமதியை வாடகைக்கு வழங்கியதற்காக ரி.ம.20,000 அபராதம் விதிக்கப்பட்டது.
Kenari Utara Travel & Tours Sdn Bhd என்ற நிறுவனம், தங்களுடைய ‘பெர்மிட்’ஐ உரிய உரிமம் இல்லாத Noreen Maju Trading என்ற நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக விற்றும், வாடகைக்கு வழங்கியும் இருந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் பேரில், அந்த நிறுவனத்துக்கு இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒவ்வொரு வழக்கிலும் ரி.ம.10,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டதால் மொத்தம் ரி.ம.20,000 ஆகிறது.
இந்த வழக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன் UPSI மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சம்பவத்துடன் தொடர்புடையதாகும். அந்த விபத்தில் பல மாணவர்கள் உயிரிழந்ததால், பேருந்து சேவை வழங்கும் நிறுவனங்களின் சட்டப்பூர்வ பொறுப்புகள் குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
அதிகாரிகள் தெரிவித்ததாவது, எதிர்காலத்தில் இதுபோன்ற சட்டமீறல்கள் நடைபெறாத வகையில் போக்குவரத்து துறையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் என்றும், உரிமமில்லா நிறுவனங்களுக்கு தண்டனை கடுமையாக அமையும் என்றும் கூறினர்.
இந்தச் சம்பவம், பொதுமக்களின் பாதுகாப்பையும், போக்குவரத்து சேவை நிறுவனங்களின் நம்பகத்தன்மையையும் பாதுகாக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை மீண்டும் வெளிக்கொணர்கிறது.
– யாழினி வீரா



