Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

செந்தூலில் கண்ணதாசன் நினைவேந்தல் விழா – ஜூன் 29ஆம் தேதி சிறப்பாக நடைபெறுகிறது

கோலாலம்பூர், ஜூன் 24 – தமிழர்களின் மனத்தில் என்றும் வாழும் கவியரசு கண்ணதாசனை நினைவுகூரும் வருடாந்திர விழா, எதிர்வரும் ஜூன் 29ஆம் தேதி செந்தூல், ஜாலான் ஈப்போவில் அமைந்துள்ள செட்டியார்கள் மண்டபத்தில் மாலை 1.30 மணிக்கு இசை மங்களம் மத்தியில் தொடங்குகிறது.

இந்த நிகழ்வில், விழா ஒருங்கிணைப்பாளர் மற்றும் செயலாளரான திரு கரு. கார்த்திக் வரவேற்புரை வழங்க உள்ளார். தொடர்ந்து கவிஞர் கோவதன் அவரது கவிதையுடன் நிகழ்ச்சிக்கு கவிமணப்பு சேர்க்க, கவிஞர் பெர்னாட்ஷா ‘வள்ளுவனின் பாதையில் கண்ணதாசன்’ என்ற தலைப்பில் உரையாற்றுவார்.

இந்த ஆண்டு விழாவின் சிறப்பு அம்சமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த இலக்கியவாதிகளும் இசைஞர்களும் பங்கேற்கின்றனர். தமிழ்ச்சுடர் தாமல் கோ. சரவணன் “காலத்தால் அழியாத காவியம்” என்ற தலைப்பில் பேச, இசைவாணி இந்திரா விஜயலட்சுமி “சமுதாய சீர்திருத்தத்தில் கவியரசர் பங்களிப்பு” என்ற தலைப்பில் உரையாற்றுவார்கள்.

பண்பாட்டு விழாவின் ஒரு முக்கியப் பகுதியாக, ‘மொழி, இனம், கலை, கலாச்சாரம்’ என்ற அடிப்படையில் பல ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வரும் மலேசிய இந்தியர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இதுவரை 250க்கும் மேற்பட்டவர்களுக்குப் புகழ் பெற்ற “கண்ணதாசன் விருது” வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டிற்கான விருது பெறும் சிறப்பு நபர்களாக டத்தோஸ்ரீ தெய்வீகன், புகழ்பெற்ற ஓவியர் லேனா, சமூக சேவையாளர் கமல சரஸ்வதி, எழுத்தாளர் விஜய வாகினி மற்றும் கல்வியாளர் எல். ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விழாவின் மிக முக்கிய தருணமாக, மலேசிய ம.இ.கா தேசிய துணைத் தலைவர் மற்றும் தாப்பா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் விழாவிற்குத் தலைமை வகிக்கிறார். அவர் வழங்கும் உரை, இலக்கியம், சமூகம் மற்றும் தமிழ் வளர்ச்சியைச் சுட்டிக் காட்டும் வகையில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இலக்கியத்தில் ஆழமான பாசம் கொண்டோர், கவியரசர் ரசிகர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

-யாழினி வீரா

Scroll to Top