
கோலா தெரெங்கானு, 25 செப். – தெரெங்கானு சாலைப் போக்குவரத்து துறை (ஜேபிஜே) மேற்கொண்ட சிறப்பு சோதனையில், வணிக வாகன உரிமையாளர்கள் சிலர் சிறுவர்களை ஓட்டுநர்களாகவும், உதவியாளர்களாகவும் பணியமர்த்தி வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நேற்று ஜேபிஜே நடத்திய ‘ஒப்பரேசி காஸ் கெம்பூர் கென்டேரான் பெர்டகாங்கான்’ நடவடிக்கையின் போது, 16 வயதான சிறுவன் ஒருவர் லைசன்ஸ் இன்றி வணிக வாகனத்தை ஓட்டி கொண்டிருந்தபோது பிடிக்கப்பட்டார். அந்த லாரி தேங்காய் ஓடு ஏற்றி மராங்க் நோக்கிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜேபிஜே தெரெங்கானு இயக்குநர் மொக்த் ஸம்ரி சாமியோன் கூறுகையில், அந்த வாகனத்தின் கிளீனரும் சிறுவனே என கண்டறியப்பட்டது. உரிமையாளர் செலவை குறைக்க சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கலாம் என அவர் சந்தேகித்தார்.
“இத்தகைய நடவடிக்கை ஓட்டுநருக்கும், பிற சாலைப் பயனாளர்களுக்கும் மிகப் பெரிய அபாயத்தை ஏற்படுத்தும். இதற்காக வாகன உரிமையாளருக்கு சம்மன் வழங்கப்பட்டு, லாரி பறிமுதல் செய்யப்பட்டது,” என அவர் தெரிவித்தார்.
செப். 1 முதல் 24 வரை நடந்த சோதனைகளில் மொத்தம் 5,315 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டு, 603 வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் எக்ஸ்பிரஸ் பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள், லாரிகள், வாடகை கார்கள் மற்றும் ஈ-ஹெய்லிங் வாகனங்களும் அடங்கும்.
கண்டறியப்பட்ட குற்றங்களில், ஓட்டுநர் அனுமதி (PSV) காலாவதி, அதிக சரக்கு ஏற்றம், இன்சூரன்ஸ் காலாவதி, சிக்னல் மீறல், பொருள் வாகன லைசன்ஸ் (GDL) காலாவதி போன்றவை முக்கியமானவை.
மேலும், 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன; 144 வாகனங்கள் எடை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன; 12 வாகனங்களுக்கு பிற வகை நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.
“வணிக வாகனங்கள் விதிமுறைகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கும், சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைப்பதற்கும் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்,” என மொக்த் ஸம்ரி தெரிவித்தார்.
-யாழினி வீரா



