
பத்துமலை, 3 பிப்ரவரி — பத்துமலை திருத்தலத்தில் பக்தர்களின் வசதிக்காக மின் படிக்கட்டு மற்றும் பல்நோக்கு மண்டபம் அமைக்கும் திட்டங்களுக்கு உரிய அனுமதி வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி உறுதியாக அறிவித்துள்ளார்.
இன்று காலை பத்துமலைக்கு சிறப்பு வருகை தந்த மந்திரி புசாரை, ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா மற்றும் ஆலய நிர்வாகத்தினர் உற்சாகமாக வரவேற்றனர். வரவேற்பின் ஒரு பகுதியாக, மந்திரி புசாருக்கு மரியாதை மாலை அணிவிக்கப்பட்டது.
பின்னர் தேவஸ்தான நிர்வாகத்துடன் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் மந்திரி புசார் கலந்துகொண்டார். இதில், பத்துமலையில் மின் படிக்கட்டு மற்றும் மிகப்பெரிய பல்நோக்கு மண்டபம் கட்டும் திட்டங்கள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, இந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான அனைத்து ஆவணங்களும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மந்திரி புசார், “பத்துமலை மலேசியாவின் முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்று. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் இந்த திருத்தலத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுவது அவசியம். பக்தர்களுக்கு எளிதான அணுகலை வழங்கும் வகையில் மின் படிக்கட்டு மற்றும் பல்நோக்கு மண்டபம் கட்டும் முயற்சி ஒரு முக்கியமான முன்னேற்றம். தேவஸ்தான நிர்வாகம் இதற்கான அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் முறையாக மேற்கொண்டு, உரிய அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளது.
இந்த திட்டங்களுக்கு தேவையான அனுமதிகள் வழங்கப்படும், ஆனால் இதற்கான நிர்வாக அனுமதி மற்றும் கட்டமைப்பு நடவடிக்கைகள் சிறிது காலம் எடுக்கலாம். இருந்தாலும், இந்த திட்டங்கள் விரைவில் நிறைவேறுவதற்கான தேவையான அனைத்து ஆதரவையும் அரசு வழங்கும். எனது கடமையாக, இந்த அபிவிருத்தி பணிகள் முன்னேற உறுதி அளிக்கிறேன்,” என்று கூறினார்.
பத்துமலை கோயிலில் அடிப்படை வசதிகள் மேம்படுவதால், பக்தர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இது ஒரு முக்கிய மாற்றமாக இருக்கும். இந்த அறிவிப்பின் மூலம், ஆலய வளாகத்தில் அதிக வசதிகளை உருவாக்கி, பக்தர்களின் அனுபவத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.
-வீரா இளங்கோவன்