
கோலாலம்பூர், 26 ஜனவரி — அடுத்த பிப்ரவரி மாதம் அமலுக்கு வரும் புதிய குறைந்தபட்ச ஊதிய உயர்வினைச் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (SME) எளிதாக பின்பற்றும்படி உதவிகள் வழங்கப்படும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு உறுதியளித்துள்ளது.
துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறுகையில், SME நிறுவனங்களுக்கு செலவுகளை திறம்பட நிர்வகிக்க நிதி நிர்வகிப்பு பயிற்சிகள் உள்ளிட்ட உதவிகளை அமைச்சு வழங்கவுள்ளது.
“இந்த நடவடிக்கை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை உயர்த்துவதுடன், மலேசிய தொழிலாளர்களுக்கு மேம்பட்ட வாழ்க்கை நிலையை வழங்க உதவும். இது தற்போதைய சூழலில் மிதமான உயர்வாக தோன்றினாலும், மந்திரி முழு ஆதரவு அளிக்க முனைந்துள்ளது,” என அவர் விளக்கினார்.
இது தொடர்பாக கோலாலம்பூரில் நடந்த 2025 மலேசிய SME மீட்பு மற்றும் வளர்ச்சி மாநாட்டில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் ரமணன் பேசியுள்ளார்.
கடந்த அக்டோபரில் 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின்போது பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், குறைந்தபட்ச ஊதியத்தை 1,500 ரிங்கிட்டிலிருந்து 1,700 ரிங்கிட்டாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இந்த மாற்றம் பிப்ரவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும்.
இந்த மாற்றத்தின் போது SMEக்கள் சந்திக்கும் சவால்களை தீர்க்க அமைச்சு தொடர்ந்து ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளதாகவும், தொழில்முனைவோர்கள் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ரமணன் கூறினார்.
-வீரா இளங்கோவன்