
ஷா ஆலம், ஏப்ரல் 14:
தாமான் ஸ்ரீ முதா பகுதியை தொடர்ந்து தாக்கி வரும் வெள்ளப்பெருக்கு பிரச்சனைக்கு சரியான தீர்வை அரசும் உள்ளாட்சித் துறைகளும் எடுக்கவில்லை என்பதால், அப்பகுதி குடியிருப்பாளர்கள் கடும் எதிர்வினை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள், 7 நாட்கள் காலக்கெடு வழங்கி, ஏப்ரல் 20 ஆம் தேதி மதியம் 2 மணிக்குள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், பெரிய அளவிலான போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
“புரட்சி” இயக்கத்தின் தலைவரும், சமூக சேவையாளருமான உமாகாந்தன் கிருஷ்ணன் கூறுகையில், கடந்த ஆண்டு அரசால் நிறுவப்பட்ட மூன்று புதிய நீர் பம்புகள் வெள்ள நிலைக்கு உதவாது பயனற்றதாக மாறிவிட்டதாக தெரிவித்தார். “இந்த ஆண்டு மட்டும் இரு முறை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மழை வரும் போதே மக்கள் உயிர் அச்சத்தில் இருக்கின்றனர்,” என்றார் அவர்
சுமார் 30க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் அருகிலுள்ள நீர் வாயிலின் அருகே கூடி, செய்தியாளர் மாநாட்டை நடத்தினர். கடந்த வாரம் ஏற்பட்ட மழையால் வீடுகளில் கழிவுநீர் கலந்து வெள்ளம் ஏற்பட்டது என்றும் கூறப்பட்டது. பம்புகள் இயங்காததற்கான முக்கியக் காரணம் மின்சாரம் இல்லாமை என்றும், சில குடியிருப்பாளர்கள் நேரில் சென்று பம்புகளை சரிபார்க்க முயற்சித்த போதும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
2021 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் இந்த பகுதி மிகுந்த சேதமடைந்தது. வீடுகள் மூன்று மீட்டருக்கு மேல் தண்ணீரில் மூழ்கின. பலர் உயிரிழந்தனர். அதன் பின்னர், RM7.4 மில்லியன் செலவில் புதிய பம்புகள் நிறுவப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் சுசானா, பரசுராமன், சித்தார்த் போன்றோர் தங்கள் குடும்பங்கள் எதிர்கொண்ட நஷ்டங்களையும், தொடர்ந்து நீடிக்கும் பயத்தையும் பகிர்ந்தனர். “நாங்கள் வீடு, வாகனம், வாழ்வாதாரம் என அனைத்தையும் இழந்துள்ளோம். அரசு இப்போது நடவடிக்கை எடுக்காவிட்டால், இது பெரிய பொருளாதாரத் துயரமாக மாறும்!” என வலியுறுத்தினர்.
இக்கோரிக்கையை மாநிலமும், உள்ளாட்சியும் நேரில் எடுத்துக்கொண்டு உடனடி தீர்வு அளிக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-வீரா இளங்கோவன்