
கோலாலம்பூர், 28 பிப்ரவரி — மலேசியாவின் உயர்க்கல்வி துறையின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட 2025-2035 உயர்க்கல்வி திட்ட வரைவு விரைவில் அங்கீகாரத்திற்குத் தயாராக உள்ளது என்று உயர்க்கல்வி அமைச்சு தெரிவித்தது.
இந்த திட்டத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது. இந்த உயர்கல்வி திட்டம் முழுவதுமாக மலேசியாவின் கல்வி தேவைகளை முன்னிலைப்படுத்தி வடிவமைக்கப்பட்டதாகவும், எந்தவொரு வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனையும் பெறப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமையப்பெற்ற இந்த முக்கிய திட்டத்திற்கு, கல்வி வல்லுநர் அஸ்மா இஸ்மாயில் தலைமையிலான அகாடெமிக் குழு பொறுப்பேற்றதாக அமைச்சு தெரிவித்தது. மேலும், இந்த திட்ட வரைவுக்கு மொத்தம் 240 ஆராய்ச்சி ஆய்வுகள், 100 மேற்கோள்கள் மற்றும் கல்வி வழிகாட்டி தொகுப்புகள் பங்களிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், 2025-2035 உயர்க்கல்வி திட்டம் உருவாக்கப்படும் என்று உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் கடீர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் மலேசிய உயர்கல்வியின் எதிர்கால நோக்கங்களை உறுதிப்படுத்துவதாகவும், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பல்வேறு முன்னேற்றங்களை கொண்டு வருவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
-யாழினி வீரா