
கோலாலம்பூர், 20 பிப்ரவரி — மலேசிய குடிநுழைவுத் துறை (JIM) அதிகாரி ஒருவரிடமிருந்து 12 வெளிநாட்டு பாஸ்போர்ட்கள் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக உள் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அந்தத் துறை தலைமை இயக்குநர், டத்தோக ஸக்காரியா ஷாபான் உறுதி செய்துள்ளார்.
அந்த அதிகாரி ஜனவரி 1ஆம் தேதி KLIA Terminal 2-ல் பணியில் இருந்தபோது அவரிடமிருந்து பாஸ்போர்ட்கள் மீட்கப்பட்டன.
ஜனவரி 7ஆம் தேதி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. “விசாரணை தொடரும் வரையில், அந்த அதிகாரி KLIA குடிநுழைவுத் தடுப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால், அவர் இதுவரை பணியில் ஈடுபடவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.
குடிநுழைவுத் துறையின் ஊழல் தடுப்பு பிரிவு இந்த விவகாரம் தொடர்பாக மேல் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும், கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“கடமை மீறி சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் எந்த அதிகாரிக்கும் பாதுகாப்பு வழங்கப் போவதில்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களை பணி நீக்கம் செய்யும் வரை தண்டனை விதிக்கப்படும்,” என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் நிலைத்தன்மை மற்றும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, குடிநுழைவுத் துறையிடம் ஊழல் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பாக பொதுமக்கள் புகாரளிக்கலாம் என அறிவித்துள்ளது.
தகவல் அளிக்க விரும்பும் மக்கள் 03-8801246 என்ற எண்ணில் அழைக்கலாம், அல்லது integriti@imi.gov.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார் அனுப்பலாம். மேலும், புத்ராஜெயா குடிநுழைவுத் தலைமையகத்தில் உள்ள ஊழல் தடுப்பு பிரிவிற்கு நேரில் சென்றும் புகார் அளிக்கலாம்.