Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

உலக அரங்கில் மலேசியா கொடியை உயர்த்திய ஜோகூர் பாருவின் ராணி — டாக்டர் ரேஷ்மா பிரகாஷ்!

கோலாலம்பூர், 29 அக். –
மலேசியாவை உலக அரங்கில் பெருமையுடன் உயர்த்தியிருக்கிறார் ஜோகூர் பாருவைச் சேர்ந்த டாக்டர் ரேஷ்மா பிரகாஷ். பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒகடா, மணிலாவில் நடைபெற்ற Mrs. Universe 2025 அழகிப் போட்டியில் அவர் மூன்றாவது ரன்னர்-அப் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார். உலகம் முழுவதும் இருந்து பங்கேற்ற 120 பேரில் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

வலிமையால் வடிவான சிறுபிள்ளை பருவம்

டாக்டர் ரேஷ்மா பிரகாஷ் சிறிய ஊரில் பிறந்து வளர்ந்தவர். அவரின் தந்தை மலேசியா வான்படை (TUDM) உறுப்பினராக பணியாற்றியவர். ரேஷ்மா வெறும் ஒன்பது மாதம் வயதிலேயே அவர் உயிரிழந்தார். அதன்பின் தாயாரே குடும்பத்தின் தாங்கும் தூணாக நின்று, ரேஷ்மாவையும் அவளது மூத்த சகோதரியையும் வளர்த்தார்.
“என் தாய்தான் எனது வாழ்க்கையின் அடித்தளம். அவர் தனியாக எங்களை வளர்த்த விதம் எனக்கு உண்மையான வலிமையையும் தைரியத்தையும் கொடுத்தது,” என ரேஷ்மா நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பள்ளிக் காலங்களில் “அனாதை” என்று சிலர் கேலி செய்த சம்பவங்களும், அவளுக்கு ஆழமான காயங்களாக இருந்தாலும், அதையே ஊக்கமாக மாற்றிக் கொண்டார். அந்த மனவலிமையே அவரை மருத்துவத் துறையிலும், சமூக நலப் பணிகளிலும் முன்னேற்றியது.

வெற்றியின் பின்னால் இருந்த உறுதுணைகள்

பத்திரிகையாளர் சந்திப்பில், தனது வெற்றியின் முக்கிய காரணம் தன்னுடைய கணவர் என ரேஷ்மா குறிப்பிட்டார்.
“என் கனவுகளை நம்பி, ஒவ்வொரு படியிலும் எனக்கு துணையாக இருந்தவர் என் கணவர். அவர் இல்லையெனில் இன்று இந்த மேடையில் நிற்கும் தைரியம் எனக்குக் கிடைக்காது,” என அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மேலும் தனது நெருங்கிய நண்பர் ரூபென் மற்றும் அழகுப்படுத்தல் நிபுணர் ஷானு ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார். “அவர் எனக்கான அழகிய கேன்வாஸ் — அவரின் உள்ளார்ந்த நம்பிக்கையே எனது திறமையை வெளிப்படுத்த வழி செய்தது,” என ஷானு கூறியதோடு, அவர்களின் உறுதியான நட்பு மீடியா மையத்தில் பேசுபொருளாக இருந்தது.

மலேசியாவின் பெருமையை தாங்கி உலக மேடையில்

Mrs. Universe போட்டி என்பது அழகுக்காக மட்டும் அல்ல, தலைமைத்துவம், தாய்மை மற்றும் சமூக மாற்றத்திற்காக போராடும் பெண்களை கௌரவிக்கும் விழா.
ஜோகூர் பாருவைச் சேர்ந்த டாக்டர் ரேஷ்மா, பெண்கள் மற்றும் குடும்பங்களின் முழுமையான நலத்தை முன்னேற்றும் பணிகளில் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறார்.
120 நாடுகளில் இருந்து வந்த போட்டியாளர்களில் முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்றது பெரும் சாதனை. அவரது பெயர் 3வது ரன்னர்-அப் என அறிவிக்கப்பட்டபோது, மலேசியா மற்றும் ஜோகூர் பாரு கொடிகளை ஏந்தி மேடையில் நின்றது நாட்டின் பெருமை தருணமாக அமைந்தது.

பெண்களுக்கு ஊக்கமாகிய ஒரு ராணி

“ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய கனவுகளை அடைய தன்னம்பிக்கையுடன் நிற்க வேண்டும். குடும்பம், நண்பர்கள், வாழ்க்கை துணை ஆகியோரின் ஆதரவு அவசியமானது, ஆனால் வலிமை தன்னுள்ளேயே இருக்க வேண்டும்,” என ரேஷ்மா கூறினார்.
மேலும், “பெண்களை முன்னேற்றுவது ஆண்களின் பொறுப்பும் கூட. பெண்கள் உலகம் நினைப்பதைவிட பல மடங்கு வலிமையானவர்கள்,” என அவர் வலியுறுத்தினார்.

ஜோகூர் பாருவில் பல கிளைகளுடன் இயங்கும் தனது Klinik Keluarga dan Surgeri மூலம், டாக்டர் ரேஷ்மா மற்றும் அவரது கணவர் OKU (மூன்றாம்தரம் திறனற்றோர்) சமூகத்திற்கும் இலவச மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றனர்.

அறிவிலும், இதயத்திலும், நம்பிக்கையிலும் ஒளிரும் உண்மையான ராணி — டாக்டர் ரேஷ்மா பிரகாஷ்.

Scroll to Top