
கோலாலம்பூர், 3 பிப்ரவரி — தொழிலாளர்களின் நலன் மற்றும் வணிக போட்டித்தன்மைக்கு இடையே சமநிலையை உறுதிசெய்யும் நோக்கில், அந்நிய தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமநிதி (EPF) கட்டாயமாக 2% வழங்க அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது. இது, முன்பு பரிந்துரைக்கப்பட்ட 12% கட்டணத்துடன் ஒப்பிடும்போது மிக குறைவானதாக இருக்கிறது என்று மலேசிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
“தொடக்கத்தில், 12% வரையிலான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பதே முதல் முடிவாக இருந்தது. ஆனால், பொருளாதாரம், தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் நலன்களை கருத்தில் கொண்டு, இதை 2% ஆக குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது,” என்று அவர் கூறினார்.
மேலும், “நாங்கள் இதை 2% ஆக நிலைநிறுத்தியுள்ளோம். இது மிகவும் குறைவான தொகை. அமைச்சரவையின் மேல்முறையீட்டு பரிசீலனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. எதிர்கால பொருளாதார நிலைமைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யலாம். ஆனால் தற்போது, இந்த 2% திட்டத்தையே அமல்படுத்துவோம்,” என்று அவர் விளக்கினார்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய சீன வணிக மண்டபம் (ACCCIM) மற்றும் தொழில்துறை ஒன்றியத்தின் சீன புத்தாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நடவடிக்கையின் மூலம் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் பொழுது, முதலாளிகளின் செலவின சுமையையும் சமநிலைப்படுத்த அரசாங்கம் முனைந்துள்ளது.
-வீரா இளங்கோவன்