
சபரிமலை: கடந்த இரண்டு மாதங்களில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கிடைத்த வருமானம் ரூ.440 கோடியை எட்டியுள்ளது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தகவல் வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.80 கோடி அதிகம் ஆகும். 2023-24ஆம் ஆண்டில், நவம்பர் 15 முதல் டிசம்பர் 26 வரை மண்டல பூஜை, பின்னர் டிசம்பர் 30 முதல் ஜனவரி 20 வரை மகரவிளக்கு உற்சவம் நடைபெற்றது.
இந்த வருமானம், சன்னிதானத்தில் கிடைத்த உண்டியல் காணிக்கை மற்றும் பிரசாத விற்பனையிலிருந்து மட்டும் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பம்பை மற்றும் நிலக்கல் பகுதிகளில் பெற்ற வருமானங்கள் கணக்கிடப்பட்டு வரும் நிலையில், மொத்த வருமானம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்த ஆண்டு, தினசரி 80,000 பக்தர்களுக்கான விர்ச்சுவல் க்யூ மற்றும் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளனர். கேரள தேவசம் அமைச்சர் வி.என். வாசன் தெரிவித்ததின்படி, மொத்தம் 53,09,906 பக்தர்கள் இந்த ஆண்டு சபரிமலைக்கு வந்துள்ளனர். இதில் 10,03,305 பேர் ஸ்பாட் புக்கிங் மூலம் வந்துள்ளனர். கடந்த ஆண்டை விட 6,32,308 பேர் அதிகமாக சாமி தரிசனம் செய்துள்ளனர்.
நொடிக்கு 80 முதல் 90 பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறி தரிசனம் செய்த நிலையில், கடந்த ஆண்டு இது 65 மட்டுமே இருந்தது. மேலும், யாத்திரை முற்றிலும் சுமூகமாக நடந்தேறியதால் பக்தர்கள் எந்த சிரமமுமின்றி சாமி தரிசனம் செய்ததாகவும், எதிர்காலத்தில் சிறிய குறைபாடுகளும் சரிசெய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.